Search This Blog

Monday, August 16, 2010

தேர்தல் ஆண்டில் விவசாயிகளுக்கு சலுகை : இலவசமாக பம்ப்செட் வழங்க முதல்வர் முடிவு

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக, தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் இலவசமாக வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். இதுதவிர, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், கான்கிரீட் வீடுகளுக்கு வழங்கும் மானியம் 60 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக  உயர்த்தப்படுமென்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

 சுதந்திர தினமான நேற்று சென்னை கோட்டையில்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பரிசு வழங்கும் இலவச திட்டங்களை அறிவித்தார்.

முதல்வரின் சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவிப்புகள்:பல்வேறு மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி, ஏழைகள் இலவச மருத்துவ வசதிகள் பெறுவதால், பொது சுகாதாரம் பேணுவதில் தமிழகம், முன்னணி மாநிலமாக பாராட்டப்படுகிறது. ஏழைகள், நோய்வாய்ப்பட்டோர், அனாதைகள் மீது அன்பும், பரிவும் கொண்டு, அவர்களுக்காகவே வாழ்ந்த, அன்னை தெரசா பிறந்த நூற்றாண்டு, வரும் 26ம் தேதி துவங்குகிறது. அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லை என்ற புது வரலாறு படைக்க, கிராமப் பகுதிகளில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகளையும், ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும், "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' இந்த ஆண்டு துவங்கப்படுகிறது. முதற்கட்டமாக மூன்று லட்சம் வீடுகள் கட்ட, 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 15 ஆயிரம் சேர்த்து, 75 ஆயிரம் ரூபாயாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டை, "உலக இளைஞர்கள் ஆண்டு' என அறிவித்துள்ளது.

இதையொட்டி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சியளிக்கும் புதிய திட்டம், இந்த ஆண்டு நடைமுறைபடுத்தப்படும். இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த மற்றும் பொறியியல், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், கடந்த நான்கு ஆண்டுகளில் 3,465 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், சாலைகளை சீரமைக்க இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படும் விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால் மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதற்கு பதிலாக, திறன் மிக்க புதிய பம்பு செட்டுகள் பொருத்துவதன் மூலம், 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். சிறு, குறு விவசாயிகள் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கி, இலவசமாக புதிய மின் மோட்டார்கள் வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

No comments: