Search This Blog

Thursday, August 26, 2010

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மின்சிக்கனம் தரும் "நீர்வழிச்சாலை'

தமிழகத்தில் நீர்வழிச்சாலை அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், மின்சார சிக்கனமும் கிடைக்கும்,'' என தேசிய நீர்வழிச்சாலை வளர்ச்சி தொழில்நுட்ப அமைப்பு தலைவர் ஏ.சி.காமராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதி, 25 சதவீத மின்சாரம் மிச்சமாகும் என்பதால், விவசாயிகளுக்கு இலவச பம்பு செட் திட்டத்தை அறிவித்துள்ளார். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போவதால்தான் அதிக மின்சாரம் செலவாகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர, சமவெளிக் கால்வாய் அமைத்து, நீர்வழிச்சாலையாகவும் பயன்படுத்தலாம். கடல் மட்டத்திற்கு மேல் 250 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் இக்கால்வாயை அமைக்க வேண்டும். தமிழகத்தில் 900 கி.மீ., அளவு அமைக்கலாம். இதற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். மாநிலத்தின் பல பகுதிகளிலும் செல்லும் இக்கால்வாயை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதால் மாசு குறையும். மின்சாரம் தயாரிப்பு, விவசாயம் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம். இதன்மூலம் மின்செலவு 75 சதவீதம் குறைவதுடன், 1.50 கோடி பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். நீர்வழிச் சாலை திட்டம் பற்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பீகார் மாநிலத்தில் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டதுடன், மத்திய அரசின் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் நீர்வழிச்சாலை மூலம் அனைத்து மாநிலங்களையும் இணைக்கலாம். இதனால் மின்சாரத்தை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு "பவர் கிரிட்' மூலம் கொண்டு செல்வது போல, வெள்ளப் பகுதியில் இருந்து வறண்ட பகுதிக்கு "வாட்டர் கிரிட்' மூலம் தண்ணீரை கொண்டு செல்லலாம். நாடுமுழுவதும் ஒரே அளவாக 250 மீட்டர் உயரத்தில் கால்வாய் அமையும் என்பதால் நீர்மட்ட விதிப்படி இது சாத்தியமாகும். இதனை நதிநீர் இணைப்பு போன்று கருதக் கூடாது. நதிநீர் இணைப்பில், ஒரு மாநில தேவைக்கு தண்ணீர் வழங்கினால், தண்ணீர் பெற்ற மாநிலம் மீண்டும் அத்தண்ணீரை திருப்பித் தரவாய்ப்பில்லை. ஆனால் இத்திட்டத்தில் அனைத்து நீர்வழிச்சாலையும் ஒரே மட்டத்தில் செயல்படுவதால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரை கொண்டு செல்லவும், பற்றாக்குறை நீங்கிய பின், தண்ணீரை திருப்பி வழங்கவும் முடியும். தமிழக அரசு இத்திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: