Search This Blog

Wednesday, August 11, 2010

பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு

காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்' என்ற, பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., உட்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடப்பதால், மாநிலம் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டுவது பற்றி ஆலோசிக்க, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "காஷ்மீரில் அனைத்துக் கட்சிகளுக்கிடையில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், அரசியல் சாசன வரைமுறைகளுக்கு உட்பட்டு அம்மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்' என்றார்.
பிரதமரின் இக்கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று ராஜ்யசபாவில் பேசிய பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், ""சுயாட்சி என்பது இந்தியாவுடன் காஷ்மீர் ஒருங்கிணைந்திருப்பதை பிரிக்கும் நடவடிக்கையே. சுயாட்சி என்ற பெயரில் காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்குவதை பா.ஜ., ஆதரிக்காது. இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கும் முயற்சியை பா.ஜ., எதிர்க்கிறது,'' என்றார்.
ஹூரியத் கட்சித் தலைவர்களில் மிர்வாய்ஸ் உமர் பரூக் இதுபற்றி கூறுகையில், ""காஷ்மீரில் 60 ஆண்டுகளாக நிலவும் பிரச்னைக்கு சுயாட்சி என்பது தீர்வாக இருக்காது. நாங்கள் சுயாட்சி கோரவில்லை. மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு மறுவடிவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை,'' என்றார்.
ஹூரியத் அமைப்பின் மற்றொரு பிரிவு தலைவரான செய்யது அலி ஷா கிலானி கூறுகையில், ""பிரதமர், காஷ்மீரின் முக்கியப் பிரச்னைகளை புறக்கணித்து விட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாகாது,'' என்றார்.
"பனுன் காஷ்மீர்' என்ற காஷ்மீரி பண்டிட்களின் அமைப்பு, ""காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும். மோசமான விளைவுகள் ஏற்படும். சுயாட்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை,'' என, தெரிவித்துள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் தலைவர் அசோக் சிங்கல் இதுபற்றி கூறுகையில், ""காஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதைப் பற்றிப் பேசுபவர்கள், காஷ்மீர் ஏற்கனவே இந்தியாவோடு சேர்க்கப்பட்டு விட்டது என்பதையும், அதற்குச் சிறப்புச் சலுகை வழங்கி வரும் அரசியல் சாசனப் பிரிவின் 370 பிரிவை நீக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு செய்த தவறால், நாம் மானசரோவரை இழக்க வேண்டியதாயிற்று. காஷ்மீரிலிருந்து நான்கு லட்சம் இந்துக்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். அங்கு ஊடுருவலைத் தடுக்க ராணுவம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும்,'' என்றார்.
சிவசேனா எதிர்ப்பு: பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில சிவசேனா கட்சித் தலைவர் அசோக் குப்தா தலைமையில், அக்கட்சித் தொண்டர்கள் 300 பேர், ஜம்முவின் மார்க்கெட் பகுதிகளில் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டபடி ஊர்வலம் நடத்தினர். பின், ராணி பூங்காவில் கூடிய அவர்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொடும்பாவியை எரித்தனர்.
கூட்டத்தில் பேசிய குப்தா, "" பிரிவினைவாதிகளுக்கும், கல்லெறிவோருக்கும் பிரதமர் ஊக்கமளிக்கிறார். கல்லெறிவோரால் காயம் பட்ட பாதுகாப்புப் படை வீரர்களின் கட்டுப்பாட்டை குலைக்கிறார்,'' என்று கண்டனம் தெரிவித்தார். அதேநேரத்தில், காஷ்மீரின் முக்கியக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முகமது யூசுப் ஆகியோர் பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

No comments: