Search This Blog

Friday, August 20, 2010

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலையே கூட முறியும்: இளங்கோவன்

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை வைக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் நட்பகம் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மெய்யப்பன் தலைமையில், வசந்தகுமார் எம்.எம்,ஏ., போராட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது: சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் நட்பகம் சார்பில், பல வகைகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரத்த தானம் செய்து பார்த்தார்கள். ரத்தக் கையெழுத்து இயக்கம் நடத்தினர். ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி தமிழக அரசிடம் கொடுத்தனர். இவ்வளவு செய்தும் இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.இங்கே உள்ளவர்கள் ஊழல் செய்வதில் கில்லாடிகள். நாங்கள் கொள்ளையடிக்கவில்லை. ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. மருத்துவமனைக்கு ராஜிவ் காந்தி பெயர் வைக்க வேண்டுமென்று தான் கேட்கிறோம். நான், காந்திய வழியில் அரசியலில் களமிறங்கியுள்ளேன். எங்கள் காங்கிரசில் நேதாஜி வழி என்றும் ஒரு வழி உள்ளது. இப்போது உள்ள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் கண்ணசைத்தால், அனைவரும் நேதாஜி வழியில் களமிறங்கவும் தயார்.

நான் மனதில் பட்ட கருத்தை பேசுகிறேன். அதை தவறாக கருதி டில்லிக்கு கோள்மூட்டி விடுகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லை. சோனியா, ராகுல் கரத்தை வலுப்படுத்துவதே என் நோக்கம். கட்சிக்கு கடுமையாக உழைப்பேன். மனதில் பட்டதை நான் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருப்பேன். என்னைத் தடுக்க முடியாது. சென்னையில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆண்டுகள் பலவாகியும் இன்னும் கட்டப்படவில்லை. அரசிடம் பணம் இல்லையா அல்லது கொடுக்க மனமில்லையா? அரசிடம் பணம் இல்லை என்றால் நாங்களே பணம் வசூலித்து கட்டிக் கொள்கிறோம்.

வலி என்கின்றனர். வலி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. நல்ல காரியத்தை செய்தால் வலி எப்படி ஏற்படும். கூட்டணி தொடரும் என்றால் எப்படி தொடரும். இந்தக் கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது.அம்மையார், யாருடன் கூட்டணி வைக்கச் சொன்னாலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். நான், அம்மையார் என்று சொன்னது சோனியாவை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்தால் சரியாக இருக்கும் என்று நாங்கள் மேலிடத்திற்கு சொல்லி வருகிறோம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

No comments: