Search This Blog

Wednesday, August 25, 2010

ஜெ., ஆட்சியை கொண்டு வர தலைகீழாய் நிற்கின்றனர் :கருணாநிதி

ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வர, கம்யூனிஸ்டுகள் தலைகீழாக நிற்கின்றனர்; அதற்காக, அரசின் சாதனைகளை மறைக்கப் பார்க்கின்றனர்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி ஆதரவாளர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

அவர்களை வரவேற்று, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:திருப்பூர் பனியனுக்கு பெயர் பெற்றது. மனிதன் உடை உடுத்தும்போது பனியனைப் போட்டுவிட்டு பின், சட்டை அணிந்து கொள்வது வழக்கம். தற்போது பனியன் போன்ற உங்களை எல்லாம் அணிந்திருக்கிறேன். சட்டையை எப்போது அணியப் போகிறேன் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.மார்க்சிஸ்ட் கட்சியை உடைத்து, அதில் உள்ளோரை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை; நான் அப்படிப்பட்ட நோக்கம் கொண்டவனும் அல்ல. யாரை தோழர்கள், நண்பர்கள் என்று அழைத்தேனோ, அவர்களைத்தான் இன்று உடன் பிறப்புகள் என்று அழைத்திருக்கிறேன்.

கம்யூனிஸ்டுகளுக்கும், எனக்கும் பந்தம், பாசம் உண்டு. வலது, இடது என பிரிந்த நிலையிலும், இரண்டு தலைவர்களிடத்திலும் நான் நெருக்கமாக, நண்பராகவே உள்ளேன். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் இருக்கும் இடம் அப்படி; சேர்வார் தோஷம்.கோவிந்தசாமியின் உழைப்பு, பேச்சாற்றல், சொல்லாற்றலை அவர்கள் பொருட்படுத்தவில்லை. போ என சொல்லாமல் போகவிட்டு விட்டனர். அவர் இங்கு வந்திருப்பது ஆறுதல் பெறுவதற்காகத்தான். அவருக்கு சோதனை வந்ததும், அழைத்து பேசினேன்."என் கட்சிக்கு வா' என்று சொல்லும் அற்ப புத்தியில் அல்ல. தளபதியாக இருந்தவர் சோதனையை எப்படி தாங்கிக் கொள்வார் என அழைத்து ஆறுதல் சொன்னேன்; மருந்து தடவி விட்டேன்.

நான் இரண்டாவது முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, கோபாலபுரம் வீட்டிற்கு கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமியும், சுப்புவும் வந்தனர். "மணலி கந்தசாமி உங்கள் தலைமையில், தி.மு.க.,வில் இணைய விரும்புகிறார்' என்றார் சுப்பு. "நீங்கள் வரவேண்டாம்; வந்தாலும் சேர்க்க மாட்டேன், பெரும் தலைவரான நீங்கள் வருவது எனக்கு பெருமைதான்; உங்களுக்கு பெருமை இல்லை' என்று மறுத்து விட்டேன். இதனால் மணலி கந்தசாமி வேறு கட்சிக்கு போய்விட்டார்.மார்க்சிஸ்டாக இருந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும், அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் அல்ல; தற்போது, கொள்கையை மாற்றுவதையே தங்கள் கொள்கையாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காக முழுமூச்சாக, தலைகீழாக நிற்கின்றனர். தி.மு.க., அரசின் சாதனைகளை மறைக்கப் பார்க்கின்றனர். அரசின் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது. தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

உரிய இடத்திற்கு வந்துவிட்டேன்: விழாவில், கோவிந்தசாமி எம்.எல்.ஏ., பேசும்போது, ""திருப்பூர் மக்களுக்காக பல கோடி ரூபாயில் திட்டங்களை  தந்ததால் பாராட்டு விழா அறிவித்தேன். அதற்காக, என்னை அழைத்துக்கூட, பேசாமல் கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். ""நானும் உரிய இடத்திற்கு வந்துவிட்டேன். அவர்கள் என்னை நீக்கியதாக எனக்கும் கடிதம் வரவில்லை; சபாநாயகருக்கும் போகவில்லை. என் ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்; நான் வேறொரு நாளில் இணைவேன்,'' என்றார்.

சட்டசபையில் ஜீவா படம் : சட்டசபையில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் படம் வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.விழாவில் முதல்வர் பேசும்போது, ""சட்டசபையில் பல தலைவர்களின் படங்கள் உள்ளன; ஜீவானந்தம் படம் வைக்க வேண்டும் என சிவபுண்ணியம் எம்.எல்.ஏ., என்னிடம் கேட்டார்; கோவிந்தசாமியும் கேட்டார். வைக்கப்படும் என்று சொன்னேன்.""இன்று நீங்கள் எல்லாம் தி.மு.க.,வில் இணைந்துள்ளீர்கள். இந்த நாளை நினைவில் வைத்து, சட்டசபையில் ஜீவானந்தம் படமும் வைக்கப்படும். இது கோவிந்தசாமி, சிவபுண்ணியத்திற்கு நான் காட்டும் மரியாதை,'' என்றார்.

No comments: