Search This Blog

Thursday, August 26, 2010

டில்லியில் நான் இருந்தாலும் பழங்குடியினர் நலனே முக்கியம்: ராகுல் உணர்ச்சி பேட்டி

நான் டில்லியில் இருந்தாலும் பழங்குடியின மக்களின் பாதுகாவலனாகத் தான் இருப்பேன்,'' என காங்., பொதுச் செயலர் ராகுல் உணர்ச்சிபட தெரிவித்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா என்ற நிறுவனம், ஒரிசா, நியம்கிரி மலையில் பாக்சைட் தாதுக்களை வெட்டி எடுக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு, இந்த சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்துவிட்டார். இது, ஒரிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மறுக்கப்பட்டதா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழி வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் அரசியல் பார்வையாளர்கள் இந்த பிரச்னையை பார்க்கின்றனர். இருப்பினும், வேதாந்தா நிறுவனம் ஒரிசாவை விட்டு சென்று விடவில்லை; இந்த விவகாரத்தில் அரசியல் இருக்காது என்றே கருதுகிறேன். ஒரிசாவில் இப்போது தான் முதன் முறையாக பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இது போன்ற திட்டங்கள் தேவை என, முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியம்கிரி மலையில் தங்களது உரிமைகளை நிலைநாட்ட போராடிய பழங்குடியின மக்களை, காங்., பொதுச் செயலர் ராகுல் பாராட்டிள்ளார். நேற்று, நியம்கிரி மலை அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற ராகுல், பழங்குடியின மக்களிடையே பேசியதாவது: நான் டில்லியில் இருந்தாலும் உங்களது பாதுகாவலனாகத் தான் இருப்பேன். எப்போதெல்லாம் நியம்கிரி மலைவாழ் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நான் வருவேன். மாநிலத்தின் வளர்ச்சி என்பது முக்கியமானது தான். அதே நேரத்தில், ஏழைகள் மற்றும் பழங்குடியின மக்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஏழைகள், பழங்குடியின மக்கள் மற்றும் பின்தங்கியவர்களை அழித்து விட்டு வளர்ச்சியை எட்டிவிட முடியாது. நியம்கிரியை பொறுத்தவரை, பழங்குடியின மக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.

ஏழை மக்களின் குரல் வளையம் நசுக்கப்பட்ட போது, அவர்களது குரல் ஒலி டில்லியில் எதிரொலித்தது. இப்போது நீங்கள்(பழங்குடியினர்), உங்களது நிலங்களையும், உங்களையும் காப்பாற்றிக் கொண்டீர்கள். என்னைத் தேடி வந்த ஒரு பழங்குடியின இளைஞனும், பெண்ணும் வருத்தத்துடன் தங்களது கடவுளை அபகரிப்பதாக தெரிவித்தனர். நியம்கிரி மலையை கடவுளாக பாவிக்கும் மக்கள், அதைக் காப்பாற்ற எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் கூறினர். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பழங்குடியின மக்களின் நலம் காக்க, காங்கிரஸ் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.

No comments: