Search This Blog

Tuesday, August 17, 2010

அடுத்த மாதம் 17-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், கட்சித் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி மற்றும் அகமது படேல், மோதிலால் வோரா உள்பட 26 காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உறுப்பினர்களில் ராகுல்காந்தி, திக்விஜய்சிங் ஆகியோர் வெளியூர் சென்றிருப்பதால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாநில பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டது.
 
கூட்டம் முடிவடைந்த பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பத்திரிகை தொடர்பு பிரிவு தலைவர் ஜனார்தன் திவிவேதி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் கூறியதாவது:-
 
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல், ஆகஸ்டு 27-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு செப்டம்பர் 2-ந் தேதி கடைசிநாள் ஆகும். மனுக்கள், 3-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 10-ந் தேதி கடைசிநாள்.

தலைவர் பதவிக்கு போட்டி இருந்தால், செப்டம்பர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும். அதே நாளில், நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள், செப்டம்பர் 21-ந் தேதி அறிவிக்கப்படும்.
 
காரிய கமிட்டி கூட்டத்தில், காஷ்மீர் கலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், காஷ்மீர் நிலவரம் குறித்து கூட்டத்தில் விளக்கம் அளித்தார். தீவிரவாத ஊடுருவல் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்.
 
காஷ்மீரில் பெய்த பேய்மழை, மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்து ஆகியவற்றில் பலியானவர்களுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
இவ்வாறு ஜனார்தன் திவிவேதி கூறினார்.
 
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தலைவர் பதவிக்கு ஒருமித்த கருத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வட்டாரத்தில் இருந்து தெரியவருகிறது. சோனியாகாந்தி, இப்பதவியில் 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக அமர்ந்தார். கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து தலைவர் ஆனார். 2005-ம் ஆண்டு தேர்தலில், சோனியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்த தடவையும் அவர் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து 4-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை பெறுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் கூட, இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், தற்போது, தலைவர் மற்றும் செயல் தலைவராக உள்ள சோனியாகாந்தி, தலைவர் பதவியை மட்டும் தான் வைத்துக்கொண்டு, செயல் தலைவர் பதவியில் ராகுல்காந்தியை நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: