Search This Blog

Monday, August 23, 2010

பீகாரில் கிரிமினல் பின்னணி உடையவர்களுக்கு டிக்கெட் கிடையாது:காங்கிரஸ்

பீகார் சட்டசபை தேர்தலில் குற்றப் பின்னணி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட, "சீட்' கொடுக்கப்பட மாட்டாது' என, காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், எப்படியாவது சீட் பெற்று விடலாம் என, கனவு கண்டுகொண்டிருந்த குற்றப் பின்னணி உடைய அரசியல்வாதிகள், கலக்கம் அடைந்துள்ளனர்.

பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. தற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, இந்த தேர்தலிலும் தொடர்கிறது. மற்றொரு புறம், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவும், லோக்ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இவர்களுக்கிடையே, தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிந்துள்ளது. இந்நிலையில், பீகாரில் காங்கிரசை பலமான கட்சியாக்க வேண்டும் என்பதில், அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல் தீவிரமாக உள்ளார். இதற்காக, தன் இளைஞர் படையை அவர் முடுக்கி விட்டுள்ளார். காங்கிரசில் சேர்ந்து எப்படியாவது சீட் பெற்றுவிடலாம் என, பணபலம் மற்றும் ஆள் பலம் கொண்ட, குற்றப் பின்னணி உடைய சிலர் கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால், இவர்களின் கனவு, பகல் கனவாகி விட்டது.

கிரிமினலுக்கு சீட் இல்லை: பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி மெகபூப் அலி கய்சர் இது குறித்து கூறியதாவது:பீகாரில் காங்கிரஸ் பலமான கட்சியாக உருவெடுக்கும். இதற்கான முயற்சிகளை கட்சி மேலிடம் எடுத்து வருகிறது. யார் வேண்டுமானாலும் கட்சியில் இணையலாம். இதற்கு எந்த நிபந்தனையும் இல்லை. அதே நேரத்தில், குற்றப் பின்னணி உடைய எவருக்கும் வரும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட மாட்டது.இதற்காக, தேர்தலில் போட்டியிட சீட் கேட்கும் ஒவ்வொருவரின் பின்னணி குறித்தும், முழுமையாக ஆய்வு செய்யப்படும். எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாதவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் தர அனுமதி வழங்கப்படும்.

ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர், இன்று(நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, மேலும் பலர் விரைவில் காங்கிரசில் இணையவுள்ளனர்."பீகாரில் காங்கிரஸ் வெற்றி பெறாது' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கூறி வருகின்றனர். வரும் தேர்தலில் இதை பொய்யாக்குவோம். மேலும், மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான், பீகார் காங்கிரசை வழி நடத்துகின்றனர் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கூறுகின்றனர்.

ஏன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில், மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் இல்லையா?பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளம் - லோக்ஜனசக்தி கூட்டணியை விட, தே.ஜ., கூட்டணி வலிமையாகவே உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 15 ஆண்டுகால ஆட்சியில் கால்நடை தீவன ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவை நடந்ததை யாரும் மறக்கவில்லை.இவ்வாறு சவுத்ரி மெகபூப் அலி கய்சர் கூறினார்.

No comments: