Search This Blog

Monday, August 2, 2010

கக்கன் விழாவில் வெளியான காங்கிரசாரின் கோஷ்டிப்பூசல்

மதுரையில் எந்தவொரு நிகழ்ச்சிக்கும், அ.தி.மு., தி.மு.க., சார்பில் கட் அவுட், பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்து பிரமாண்டத்தை வெளிப்படுத்துவது வாடிக்கை. இம்முறை இக்கலாச்சாரத்தை "கை'யில் எடுத்து கொண்டது காங்கிரஸ்.

எளிமை, நேர்மைக்கு உதாரணமாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழாவிற்காக, மதுரையில் ஜூலை 31ல் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாநில கமிட்டி சார்பில் விழா நடப்பதாக அறிவித்தாலும், மத்திய அமைச்சர் சிதம்பரம் கோஷ்டியினரே முன்னின்று நடத்தினர். விழா மைதானம் தேர்வு, இசை கச்சேரி ஏற்பாடு, பாஸ் வினியோகம், தொண்டர்களுக்கு பஸ் வசதிகளை அக்கோஷ்டியினரே செய்தனர். விழா மேடையையும் அவர்கள் ஆக்கிரமித்தனர். மேடையில் தங்கபாலு, இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒரிருவர் மட்டும் அனுமதிக்கப் பட்டனர்.

விழா துவங்கி ஒரு மணி நேரம் கடந்த நிலையில் வாசன் வந்த போது தான், அவருடன் அவரது ஆதரவாளர்களும் வந்தனர். சிலருக்கு மேடை ஏற அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழா முடியும் வரை இச்சலசலப்பு தொடர்ந்தது. வாசன் தாமதத்திற்கு, ஒரு காரணமும் கூறப்பட்டது. கார்த்திக் சிதம்பரம் பேசி முடியும் வரை சங்கம் ஓட்டலில் அவரை காத்திருக்க வைத்து, அவரது ஆதரவாளர்கள் அழைத்து வந்ததாக எதிர் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

கூச்சல் குழப்பம்: மாணிக்தாகூர் எம்.பி., பேசிய போது, தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படும்படி குறிப்பிட்டார். ஒரு தொண்டர் எழுந்து, மதுரை நிர்வாகிகள் பெயரை குறிப்பிட தலைவர்கள் மறுப்பதாக குற்றம் சாட்டி கூச்சல் போட்டார். அதை கவனித்த சிதம்பரம், விஸ்வநாதன் எம்.பி.,யை அனுப்பி, அவரை சமாதானப்படுத்தினார். ஒவ்வொரு தலைவர்களும் பேசும்போதும், தங்கள் ஆதரவாளர்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டனர். ஒவ்வொரு தலைவர்களின் பெயர் குறிப்பிடப்படும்போதும், அவர்களது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி, விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

கூட்டணிக்கு எதிர்ப்பு?: ஆரூண் எம்.பி., பேசுகையில், ""காங்., வலுவாக இருக்கிறது. தற்போதைய கூட்டணியும் வலுவாக இருக்கிறது,'' என குறிப்பிட, கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு எழுந்தது. தற்போதைய கூட்டணிக்கு இது எதிர்ப்போ? என தொண்டர்கள் மத்தியில் பேச்சும் எழந்தது. அதை முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேச்சு பிரதிபலித்தது. அவர் பேசியதாவது: தொண்டர்களாகிய நாங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். தலைவர்கள் நீங்கள் மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். மேலிடம் எந்தப் பக்கம் போக சொன்னாலும், அந்தப்பக்கம் போவோம். நாங்கள் உங்களுடன் இருப்பதால் தவறை சுட்டி காட்டுகிறோம் என்றார். மேலும் ஆளுங்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் நீண்ட விளக்கமும் தந்தார்.

எம்.ஜி.ஆர்.,விசுவாசம்: முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் பேசியதாவது: எம்.ஜி.ஆருக்கும், காங்கிரசுக்கும் நெருக்கம் அதிகம். அவர் துவக்கத்தில் காங்கிரசில் இருந்தார். நான் கடைசியாக காங்கிரசில் சேர்ந்துள்ளேன். அவரைசிகிச்சைக்காக அமெரிக்காவுக்குஇந்திரா அனுப்பினார். பேச முடியாத நிலையில் அவரை, முதல்வராக அமர வைத்தார் ராஜிவ். எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் காங்கிரசுற்கு வர வேண்டும் என விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

மூத்த தலைவர் ஆவேசம்: காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்ற முன்னாள் அமைச்சர் பூவராகவன், நீண்ட நேரம் எடுத்து கொண்டார். கார்த்திக் சிதம்பரம், விஸ்வநாதன் எம்.பி.,யை அழைத்து பேச்சை முடிக்கும்படி கூறுமாறு அறிவுறுத்தினார். இதனால் பூவராகவன்,""யாரும் தெரியாத விவரங்களை பேசுகிறேன். இல்லையென்றால் என்னை அழைத்து இருக்க வேண்டியதில்லை,''என ஆவேசமுற்றார். பேச்சாளர்கள், நீண்ட நேரம் எடுத்து கொண்டதால், மாநில தலைவர் தங்கபாலு, கை கடிகாரத்தை காட்டியபடி இருந்தார். சிதம்பரம் அருகில் அமர்ந்த போதிலும், மத்தியமைச்சர் வாசன், மறுபுறமிருந்த இளங்கோவனுடன் பேசுவதிலேயே நேரத்தை கழித்தார்.

வாசனுக்கு பதில்: வாசன் பேசுகையில், ""கட்அவுட், பிளக்ஸ், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டாலும், குறைத்து கொள்ள வேண்டும்,''என்றார். இறுதியாக பேசிய சிதம்பரம்,""கட் அவுட் கலாசாரம் குறித்த வாசன் கருத்தை அமோதிக்கிறேன். என்றோ நடக்கும்விழா என்பதால் தொண்டர்கள் ஆர்வத்தில் வைத்துள்ளனர்,'' என்றார். விழாவில் பேசிய பல தலைவர்கள், காமராஜர் ஆட்சி அமைப்போம் என அறைகூவல் விடுத்தனர். காங்., தலைவர்கள் ஒரணியில் ஒற்றுமையாக இருப்பதை காட்டிட நடத்தப் பட்ட இவ்விழாவில் நடந்த நிகழ்வுகள் கோஷ்டி பூசலை காட்டுவதாக அமைந்தது என்னவோ உண்மை. இருப்பினும் விழா காங்கிரசாரிடம் "புதிய' உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

No comments: