Search This Blog

Sunday, August 1, 2010

காங்கிரஸ் முதன்மை கட்சியாக ஆதிதிராவிட மக்கள் துணை சிதம்பரம்

அகில இந்திய அளவில் பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ், தமிழக அரசியலை தீர்மானிக்கிற கட்சியாக விளங்குகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் முதன்மை கட்சியாக வருவதற்கு ஆதிதிராவிடர் மக்களின் துணை வேண்டும்,'' என மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில், நேற்று காங்கிரசில் இணைந்தார்.

அவருடன், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொருளாளர் கிருபா, சாதிக்அலி, ஆதிஜான், புத்தநேசன், மெய்ஞானமூர்த்தி, உமாசாசவி, சாதிக்அலி, சாந்தஸ்ரீநி, ஆதவன், கி÷ஷார்குமார், பக்தவச்சலம் உட்பட ஆயிரக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த இணைப்பு விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசும்போது, ""ஆதிதிராவிட மக்களுக்காக, காங்கிரஸ் பல்வேறு திட்டங்களை தீட்டி, அரசின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிடர்களின் வீடுகளில் ராகுல் உணவு அருந்துகிறார். இது ஆதிதிராவிடர் மக்கள் மீது அவர் வைத்துள்ள பாசம், பற்றுதலை காட்டுகிறது. கட்சியில் இணைந்துள்ள செல்வப்பெருந்தகை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் கட்சி வழங்கும்,'' என்றார். மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:

நாட்டிலேயே ஆதிதிராவிடர் சமுதாயம் மிகப்பெரிய சமுதாயம். அச்சமுதாயம் இல்லாமல் சுதந்திரப் போராட்டம் நடந்திருக்க முடியாது. ஆதிதிராவிடர் மக்களை யாரும் புறக்கணிக்க முடியாது. அவர்கள் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் முழுமையாகத் தெரியவரும். அகில இந்திய அளவில் பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ், தமிழக அரசியலை தீர்மானிக்கிற கட்சியாக விளங்குகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் முதன்மை கட்சியாக வருவதற்கு ஆதிதிராவிட மக்களின் துணை வேண்டும்.காங்கிரஸ் கட்சியில் முதல் வரிசையின் தலைவர்களாக, ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் இருந்த காலத்தில், அச்சமுதாய மக்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்து இருந்தது. அவர்கள் வெளியேறியதும், ஆதிதிராவிடர் சமுதாய மக்களின் மீதான கொடுமை அதிகரித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த கக்கன் நியமிக்கப்பட்டார்.

பின், மரகதம் சந்திரசேகர், இளையபெருமாள் தலைவர்களாக இருந்துள்ளனர். இதைப்போல தமிழக காங்கிரஸ் தலைவராக, ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வருங் காலத்தில் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த விழாவில், ஆதிதிராவிடர்கள் மட்டுமன்றி இஸ்லாமியர்களும் காங்கிரசில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் அனைத்து சமுதாயத்தினரையும் செல்வப் பெருந்தகை இணைத்துள்ளார். உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி கிடையாது. வாய்ப்பு இருந்தால் உயர்ந்தவர், வாய்ப்பு இல்லாவிட்டால் தாழ்ந்தவர். ஆதிதிராவிட மக்களுக்கு வேலை, கல்வி, சமூக அந்தஸ்து பெற்றுத் தருவது காங்கிரசின் கடமை.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் சரியான அந்தஸ்து கிடைக்கும்.இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

விழாவில், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சுந்தரம் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர். தங்கபாலு, சிதம்பரம் ஆகியோருக்கு ஆளுயுரமாலை, தங்கமுலாம் பூசிய வீரவாளை செல்வப்பெருந்தகை வழங்கினார். குதிரைப்படை, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டத்துடன் சிதம்பரத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments: