Search This Blog

Monday, August 16, 2010

கோஷ்டிப் பூசலை உருவாக்குகிறார் கார்த்தி-வாசன் ஆதரவு இளைஞர் காங். தலைவர் பாய்ச்சல்

இளைஞர் காங்கிரஸ் கட்சிக்குள் தேவையில்லாமல் கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தி வருகிறார் கார்த்தி சிதம்பரம் [^]. அவர் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களுக்குப் போகக் கூடாது என்று கோபமாக கூறியுள்ளார் தமிழ்நாடு [^] இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா. இவர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்லாமல், இளைஞர் காங்கிரஸிலும் கூட கோஷ்டிப் பூசல் கொடி கட்டிப் பறக்கிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த யுவராஜா இருக்கிறார். துணைத் தலைவராக இருப்பவர் ப.சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரத்தின் கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு கோஷ்டிகளும், யார் பெரியவர் என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுள்ளன. இதில் சிக்கி கசங்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் கோஷ்டிப் பூசலை உருவாக்கி கட்சியை சீர்குலைத்து வருவதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களை நடத்தி வருகிறார். இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக
பொறுப்பாளருமான கிரண்குமார் ரெட்டியிடமும், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளோம். அதன்பேரில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

மாநிலத் தலைவரான எனக்குக்கூட தகவல் தெரிவிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவை நடத்தியுள்ளார். இதன் மூலம் இளைஞர் காங்கிரஸில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருகிறார்.

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதித் தலைவர்கள் 28 பேர் கிரண்குமார் ரெட்டியிடம் புகார் மனு அளித்துள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய கார்த்தி சிதம்பரம் மீது கடுமையான நடவடிக்கை [^] எடுக்க வேண்டும். மாநிலத் தலைமைக்கு தெரிவிக்காமல் கூட்டம் நடத்தியதற்காக நாகை மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மூத்த தலைவர்களைக் கொண்டு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் கட்சியின் மூத்த தலைவர் அல்ல. அவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் அவர் பங்கேற்கக் கூடாது என்றார்.

இந்த இளைஞர் காங்கிரஸை நம்பித்தான் தமிழக சட்டசபைத் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் ராகுல்காந்தி. ஆனால் இவர்கள் இப்படி அடித்துக் கொள்வதைப் பார்த்தால் ராகுல் காந்தி [^] திட்டம் எப்படி நிறைவேறும் என்பது தெரியவில்லை.

No comments: