Search This Blog

Monday, May 16, 2011

தமிழக அமைச்சரவையில் ஒவ்வொரு சமூகம் பெற்ற பிரதிநிதித்துவம்

அ.தி.மு.க., அமைச்சரவையில் இடம் பெற்ற 33 அமைச்சர்களில், வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எட்டு பேரும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு பேரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 33 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். அதில் 24 பேர், புதுமுகங்களாக இடம் பெற்றுள்ளனர். கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், அனைத்து தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி வாகை சூடியது.வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவான கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி, சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், அமோக வெற்றி பெற்றனர். எனவே, அச்சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு விவசாயத் துறை, கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப்பணித் துறை, தங்கமணிக்கு வருவாய் துறை, சண்முகவேலுக்கு தொழில் துறை, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெடுஞ்சாலைத் துறை, செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்து துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, எஸ்.பி.வேலுமணிக்கு சிறப்பு திட்டங்கள் அமலாக்கம் என்ற புதிய துறையும் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வின் ஓட்டு வங்கியாக அருந்ததியர் சமுதாய ஓட்டுகளும் கணிசமாக உள்ளது. அந்த சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு, கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அச்சமுதாயத்தினரின் ஓட்டுகளும் அ.தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அமைச்சரவையில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அச்சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனபாலுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடசென்னை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையும் அக்கட்சியில் நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க.,வினர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.ஆனால், அமைச்சரவை பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிய வந்ததும், அதிருப்தி அடைந்தனர். மூன்று முறை எம்.எல்.ஏ., இரண்டு முறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., தனது வெற்றியை கோலோச்சியுள்ளதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆறு பேருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சராக செல்லூர் ராஜு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், சட்டத்துறை அமைச்சராக சுப்பையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றிருந்தாலும், வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தென்சென்னை மாவட்டச் செயலர் செந்தமிழனுக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி சி.வி.சண்முகத்திற்கும், சிறுதொழில்கள் துறை அமைச்சர் பதவி எம்.சி.சம்பத்திற்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கே.பி.முனுசாமிக்கும், சமூக நலத்துறை அமைச்சர் பதவி, செல்வி ராமஜெயத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கருப்பசாமிக்கு கால்நடைத்துறை அமைச்சர் பதவியும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி சுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.யாதவர் சமுதாயத்தில் கோகுல இந்திராவுக்கு வணிக வரித்துறையும், முத்தரையர் சமுதாயத்தில் சிவபதிக்கு விளையாட்டுத் துறையும், உடையார் சமுதாயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உணவுத் துறையும், முதலியார் சமுதாயத்தில் டாக்டர் விஜய்க்கு சுகாதாரத்துறையும், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறையும், படுகர் சமுதாயத்தில் புத்திசந்திரனுக்கு சுற்றுலா துறையும், மீனவர் சமுதாயத்தில் ஜெயபாலுக்கு மீன்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

செட்டியார் சமுதாயத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சமீபத்தில் பிஎச்.டி., முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள வைகைச்செல்வன் ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழ.கருப்பையாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் சிறப்பாக பேசுவார். ஆனால், சட்டசபைக்கு புதியவர் என்பதால் அவருக்கு அப்பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்களும் முரண்பாடாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது புதிய அமைச்சராக பதவி ஏற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயர், எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம் பெயர் 10வது இடத்திலும், எம்.சி.சம்பத் பெயர் 19வது இடத்திலும், எஸ்.பி.சண்முகநாதன் பெயர் 15வது இடத்திலும் இடம் பெற்றிருந்தது.

சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்து துறை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திறமையாக நிர்வாகப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மின் துறை தவிர, அனைத்து துறைகளுக்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள், துறை பற்றி இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments: