படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்
* பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்
* முதியோர் உதவிபெறும் பெண்களின் ஓய்வு ஊதியம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு
* மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000-ல் இருந்து இரண்டாயிரம் ஆக உயர்வு
* அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை
முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்துக்கு பதிலாக 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவது உ∙ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்து கையெழுத்திட்டார்.
சென்னை, மே.17-
தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா
முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா, நேற்று மாலை 6.40 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார். அப்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். தலைமைச்செயலக சங்கத்தினர் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று மலர்தூவி வரவேற்றனர். `புரட்சித்தலைவி வாழ்க' என்று கட்சியினர் முழக்கமிட்டனர். காரில் இருந்தபடியே முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருகரம் கூப்பியபடி நன்றி தெரிவித்து, வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.
7 திட்டங்களுக்கு அனுமதி அளித்து கையெழுத்து
தலைமை செயலகத்தில் பணிநேரம் முடிந்த பிறகும், அரசு ஊழியர்கள் ஏராளமான பேர் காத்திருந்து முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் பூச்செண்டுடன் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை விழாக்கோலம் பூண்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கோட்டையில் 10-ம் எண் `கேட்' நுழைவுவாயில் முன்பு முதல்-அமைச்சரின் கார் வந்து நின்றதும், தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். அதையடுத்து முதல்-தளத்தில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்றார்.
முதல் பணியாக 7 திட்டங்களுக்கு அனுமதி அளித்து அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4 கிராம் தங்கத்துடன் திருமண உதவித்திட்டம்
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு வந்து முதலில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும். அதற்கான ஆணையைப் பிறப்பித்து அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டு உள்ளேன்.
இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.
20 கிலோ இலவச அரிசி
முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஊதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.
பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவமாக வழங்கிடவும் உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன்.
மீனவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை
தமிழகத்தில் கடலோர மீன்வளத்தை பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.
அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்து போட்டு உள்ளேன்.
`சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை'
அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்பு திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றை தொடங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த துறை `சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இந்த துறைக்கென தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
பேட்டியின்போது, தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலர் ராமமோகனராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment