எதிர்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போராட்டங்களை முன்னின்று சிறப்பாக நடத்தி முடித்த, "மதுரையின் இரு விசுவாசிகளுக்கு' அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
கூட்டுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட செல்லூர் ராஜூ, மதுரை நகர் செயலாளராகவுள்ளார். வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று, நகர் செயலாளரானார். மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, அன்றைய ஆளுங்கட்சியினரின் பண பலத்திற்கு மத்தியில் கடும் போட்டியை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, எதிர்கட்சியாக, தி.மு.க.,வினருக்கு எதிராக, மதுரையில் அரசியல் செய்ய கடுமையாக போராடியவர். கடந்தாண்டு அக்., 18ல் மதுரை ரிங் ரோட்டில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எதிர்பார்க்காத வகையில் அதிகளவு தொண்டர்கள் திரண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து, ஜெ.,யின் மதிப்பை பெற்றார். இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினர் மீது தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் கொடுத்து, அவர்களுக்கு சவாலாக இருந்தார்.லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் மதுரையில் ஜெயலலிதா தங்கி பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார். அதற்கான ஏற்பாடுகளிலும் இவரது பங்களிப்பு இருந்தது. கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் எளிமையாக பழகுபவர். தி.மு.க., செயலாளர் தளபதியை தோற்கடித்து, முதன்முதலாக சட்டசபை செல்லும் இவரை கவுரவிக்க அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார் ஜெ.,
சாத்தூர் தொகுதியில் வென்று, தகவல் தொழில் நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயக்குமாரும் மதுரையை சேர்ந்தவர். சட்ட கல்லூரி மாணவரணி செயலாளராக இருந்து அதன் நகர் செயலாளரானார். பின் மாநில செயலாளரானார். கட்சிக்கு அதிக மாணவர்களை இழுத்து வருவதில் ஆர்வம் காட்டியதுடன், ஒவ்வொரு கல்லூரியாக சென்று அ.தி.மு.க., அமைப்புகளை ஏற்படுத்தினார். வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள், மாணவர் பிரச்னைக்காக போராட்டங்களை முன்னின்று நடத்தினார். மதுரையில் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். கடந்தாண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆர்ப்பாட்டத்திற்கு தேவையான இடத்தை தேர்வு செய்த போது, இவரது முயற்சியால் ரிங் ரோடு மைதானம் கிடைத்தது. தேர்தலுக்கு முன் இவரது ஏற்பாட்டில் பிரசார "சிடி' தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமைக்கு விசுவாசமானவராக இருந்ததால், இவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்தது.
No comments:
Post a Comment