Search This Blog

Sunday, May 29, 2011

மாநில அரசுகளை காலி செய்யும் விவசாய நில ஆர்ஜித விவகாரம்

நாடு முழுவதும் இன்று புயலை கிளப்பி வரும் சம்பவம் விவசாய நில ஆர்ஜிதம். ரோடு, மேம்பாலம், ரயில் பாலங்கள், தண்டவாளம், விமான நிலைய விரிவாக்கம், புதிய தொழிற் பேட்டைகள், என மக்களின் உபயோகத்திற்கு பயன்படும் பணிகளுக்கு ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. ஒரு பக்கம் விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பு போன்றது. மறுபக்கம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க உள்கட்டமைப்பு நன்றாக இருக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத அரசின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு விவசாய நிலங்கள் எடுக்கப்படும்போது, விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். இதை தான் விவசாயிகள் கேட்கின்றனர். மேற்குவங்க மாநிலத்தில், 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடது சாரி ஆட்சி, காணாமல் போவதற்கு, மம்தாவுக்கு ஆயுதமாக விளங்கியது, நந்திகிராம் மற்றும் சிங்கூர் விவசாய நில எடுப்பு சம்பவங்கள் தான். தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில், இப்பிரச்னை புயலை கிளப்பி வருகிறது.இம்மாநிலமும், 2012ல் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. சிங்கூர், நந்திகிராம் சம்பவங்கள் மம்தாவுக்கு கை கொடுத்தது போல், நொய்டா சம்பவம் தங்களுக்கு, சட்டசபை தேர்தலில் கைகொடுக்கும் என்று காங்கிரஸ், பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் கணக்கு போட்டு, இப்பிரச்னையை கையில் தூக்கி கொண்டன.உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சவுல் கிராமத்தில், ஆக்ராவில் இருந்து டில்லிக்கு, யமுனா எக்ஸ்பிரஸ் ரோடு அமைக்க தான் விவசாயம் நிலம் ஆர்ஜிதம் செய்தது.

ஆனால், ரோடு போடுவதற்கு பயன்படுத்தாமல், பல மாடிகள் கொண்ட அபார்ட்மென்ட்கள் கட்டுவதற்கு விற்கப்பட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நில மாபியாக்கள், புரோக்கர்கள் என கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை, உள்கட்டமைப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து, பெரிய, பெரிய வீடு கட்டுமான நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர்.தற்போது, நாடு முழுவதும் இதுதான் நடந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் 65 சதவீதம் விவசாயத்தை நம்பி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, விவசாய நிலங்கள், அத்தியாவசிய தேவையை தவிர மற்ற பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ள கூடாது. ஆனால், முக்கியமாக விவசாய நிலங்களை, அதுவும், அடிமாட்டு விலைக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், மாபியாக்கள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கின்றனர்.

நாட்டில், நிலத்திற்கு தான் இன்று அதிகளவில் மதிப்பும், கிராக்கியும் இருக்கிறது. இதை பினாமி, மாபியா பெயர்களில் அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வருகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள், விவசாய நிலம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு என தனியாக நிலங்களை முதலில் அடையாளம் காண வேண்டும். அப்போது தான், அரசியல்வாதிகள் மற்றும் மாபியாக்களின் கண்களில் இருந்து விவசாய நிலத்தை பாதுகாக்க முடியும். தொழிற்சாலைகள் நிறுவ ஒவ்வொரு மாநிலத்திலும், தனியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும்.நில ஆர்ஜிதம் செய்யும் போது எந்த நோக்கத்திற்காக செய்யப்படுகிறது என்பதை தீர்மானிக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கருத்து பெற வேண்டும்.

பட்டா பர்சவுல் கிராமத்தில், ஆக்ரமிப்பு செய்யப்பட்ட விவசாய நிலம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறிய உதாரணம் தான். மேலும், 2010, ஜூலை மாதம், நில ஆக்கிரமிப்பு செய்யும் போது, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கப்பட்டது என்று உத்தரப்பிரதேச அரசு கூறுகிறது. ஆனால், வழங்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது, அவர்கள் கேட்பது மார்க்கெட் விலை.கடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பார்லிமென்ட்டில், நில சீர்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அமலாக்கப்படவில்லை. அதற்குள், அந்த ஆட்சி முடிந்து, தேர்தலை சந்தித்தது. இன்னும், பார்லிமென்டில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக உள்ள மம்தா பானர்ஜிக்காக இந்த மசோதா காத்திருப்பு பட்டியலில் உள்ளது. சிங்கூர் மற்றும் நந்திகிராமில் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. சிங்கூரில், அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள, டாடாவின், நானோ கார் தொழிற்சாலை பணிகள் முழுமையாக்கப்பட்டு, திறக்கப்படுமா என்பது அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நிலத்தில், 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் திரும்ப கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு போதிய இழப்பீடும் தரவேண்டும் என்று மம்தா கூறி வருகிறார்.நில சீர்திருத்த மசோதாவில், 70:30 என்ற விகிதத்தில், அதாவது, தனியாருக்கு 70 சதவீத நிலத்தை மார்க்கெட் விலைக்கு விற்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தொழிற்சாலையில் வேலை கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மறு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நீண்ட நாட்கள் தொழிற்சாலை துவங்கப்படா விட்டால், அந்த நிலத்தை விவசாயிக்கே திரும்ப கொடுக்க வேண்டும் போன்றவை இடம் பெற்றுள்ளன.

ஆனால், இந்த மசோதாவில் 90:10 என்று மாற்றும்படி மம்தா கோரி வருகிறார். அதாவது, 90 சதவீத நிலத்தை, மார்க்கெட் விலையில் தான் தனியாருக்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.தொழிற்சாலைக்கு நிலம் தேர்வு செய்ய வேண்டும். அந்த நிலத்தை சுற்றிலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும். அரசின் பயன்பாட்டிற்கு விவசாய நிலம் ஆக்ரமிப்பு செய்யும் போது, விவசாயிகளுக்கு முழு இழப்பீடும் கொடுத்துவிட வேண்டும். தொழிற்சாலைகள் நிறுவ தனி இடத்தை, அரசு தேர்வு செய்து விட்டால், நிலம் தேடி, முதலீட்டாளர்கள் அலைய வேண்டியதில்லை.

இது, அவர்களது நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்தும். நகரங்களில் மட்டுமே, தொழிற்சாலைகள் நிறுவுவதை நிறுத்தி, கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளை கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான், பொருளாதாரம் நகரம் முதல் கிராமம் வரை சமன் செய்யப்படும். கிராமங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். நகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும்.விவசாயிகளின் நிலங்கள் திரைமறைவில் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. தற்போது, அரசியல்வாதிகளே நடத்தும் போராட்டங்களால் இவை வெளிச்சத்திற்கு வருகிறது. நில சீர்திருத்த மசோதா மூலம், விவசாயத்தில், தொழிற்சாலை வளர்ச்சியில் மாறுபட்ட இந்தியாவை அரசியல்வாதிகள் உருவாக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கு சாணி அடி:ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரகு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சயாரி என்ற கிராமத்தில், பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்குள்ள தும்ரிகுடா காட்டு பகுதியில், பூமிக்கு அடியில் பீங்கான் பொருட்கள் தயாரிக்க பயன்படும், "சைனா க்ளே' என்ற விலை உயர்ந்து களிமண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "சைனா க்ளே' இருப்பது தெரிய வந்தது. இதற்கான சுரங்க கான்ட்ராக்ட்டை எடுக்க அரசியல்வாதிகள் போட்டா போட்டி போட்டனர். சுரங்கம் தோண்டினால், தங்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்று பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இவர்களது பிரச்னையை சட்டசபையில், அரகு சட்டசபை எம்.எல்.ஏ.,வான சிவேரு சோமா (தெலுங்கு தேசம் கட்சி) எழுப்பவில்லை. இந்நிலையில், இவர்களை சமாதானம் செய்ய சென்ற எம்.எல்.ஏ., சிவேரு சோமாவை, பழங்குடியின மக்கள் சூழந்து கொண்டு சாணம் வீசி, தடியால், கற்களால் அடித்து காயப்படுத்தினர்.இவர்களிடம் பேசி, குறைகளை நிவர்த்தி செய்திருந்தால், இவர்கள் இதுபோன்ற போராட்டத்திற்கு சென்று இருக்க வாய்ப்பில்லை. மறு வாழ்வாதாரத்தை தான் எதிர்பார்த்து இருப்பார்கள். இவர்களது கோரிக்கையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.

No comments: