Search This Blog

Sunday, May 29, 2011

கர்நாடக பா.ஜ., அரசியலைக் கலக்கும் ரெட்டி சகோதரர்கள்

கர்நாடக அரசியலில் ரெட்டி சகோதரர்கள் வளர்ச்சி அடைந்தது, மிகவும் சுவாரசியமான விஷயம்.

ஒரு சாதாரண போலீஸ்காரரின் மகன்களாக பிறந்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சாதாரண பள்ளியில் தான் கல்வி கற்றனர்.கடந்த, 1999ம் ஆண்டு வரை அரசியல் வட்டாரத்தில் ரெட்டி சகோதரர்கள் யார் என்பதே தெரியாது. அந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பா.ஜ., தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட போது தான், ரெட்டி சகோதரர்கள், சுஷ்மா ஸ்வராஜின் தேர்தல் பொறுப்பேற்று முழுவீச்சில் அரசியலில் இறங்கினர். தேர்தலில் சுஷ்மா தோல்வியடைந்தார். ஆனாலும், அவரது நம்பிக்கைக்கு உரியவர்களாக பெயர் பெற்ற ரெட்டி சகோதரர்களுக்கு, அரசியலில் உறுதுணையாக வழிகாட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு துணை சேர்ந்தார்.

கடந்த 2000ம் ஆண்டிலிருந்து அரசியலிலும், வியாபாரத்திலும் அவர்களது கனவு நனவாக துவங்கியது. 2001ல் ஓபலாபுரம் சுரங்கத்தை விலைக்கு வாங்கினார். முதன் முறையாக அவர்களது குடும்பத்தில் இருந்து சோமசேகர், நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-03ம் ஆண்டுகளில் சுரங்க தொழில் கொடிகட்டி பறக்கத் துவங்கியது.கடந்த 2004ல் கருணாகர ரெட்டி, லோக்சபா தேர்தலிலும், ஸ்ரீராமுலு கர்நாடக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மாவட்ட தலைவர் பொறுப்புடன் பா.ஜ., கட்சியின் மாவட்ட விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது. காங்கிரசின் கோட்டையாக இருந்த பெல்லாரி, ஸ்ரீராமுலுவின் உதவி மற்றும் பண பலத்துடன் ரெட்டி சகோதரர்கள் கைக்குள் வந்தது.

அதிகாரத்தின் மூலம் ஜனார்த்தன ரெட்டி, மேலவை உறுப்பினரானார். ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் ஸ்ரீராமுலு அமைச்சரானார். முன்னாள் முதல்வராக இருந்த குமாரசாமி, தன்னிடம், 150 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறியதன் மூலம், ஜனார்த்தன ரெட்டி தேசியளவில் தலைப்பு செய்திக்குள்ளானார்.கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பெல்லாரி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது தொகுதிகளில், எட்டு தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் பா.ஜ.,வில் முக்கிய இடத்தை ரெட்டி சகோதரர்கள் பெற்றனர். கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் வெற்றி பெற்றதோடு, அமைச்சரவையில் இடம் பெறும் தகுதி ஜனார்த்தன ரெட்டிக்கும் கிடைத்தது. கூடவே பெல்லாரி, சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்ட பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சுரங்க தொழில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை என, வியாபாரத்தையும் விரிவுபடுத்திக் கொண்டனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி, அவரது வீட்டில் அமர்வதற்காக பயன்படுத்தப்படும் தங்க நாற்காலியின் மதிப்பு, 2.2 கோடி ரூபாய். பூஜை அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மதிப்பு, 2.58 கோடி ரூபாய். இடுப்பில் அணியும் தங்க பெல்டின் மதிப்பு, 13.15 லட்சம் ரூபாய். சாப்பாட்டு மேஜையில் பயன்படுத்தப்படும் தங்க தட்டுகள், ஸ்பூன், கத்தி, கிண்ணங்கள் போன்றவைகளின் மதிப்பு, 20.87 லட்சம் ரூபாய்.

கடந்த, 2010 மார்ச் 31ம் தேதி வரையிலான தன் சொத்து குறித்து, கடந்தாண்டு ஜூன் 25ம் தேதி, லோக் ஆயுக்தாவிற்கு தன் கைப்பட அளித்த அறிக்கையில் இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.வீட்டு சாமான்கள், தங்க நகைகள், ஏர் கண்டிஷன், "டிவி', மரச்சாமான்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மூன்று பக்கங்களில் எழுதிக் கொடுத்துள்ளார். இது தவிர விவசாய நிலங்கள், கட்டடங்கள், முன்னோர்கள் சொத்து என, 153.49 கோடி ரூபாய் என்றும், சம்பளமாக பெற்ற தொகை, 31.54 கோடி ரூபாய் என்றும், வியாபாரங்களின் மூலம் கிடைத்த வருவாய், 18.30 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவரது மனைவி அருணா லட்சுமி, தன் நிர்வாகத்தின் மூலம் சம்பளமாக ஆண்டுக்கு, 16.5 கோடி ரூபாய், வியாபாரத்தின் மூலம், 22.69 கோடி ரூபாய் லாபம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அவர்களது குழந்தைகளான பிரமணி, கீர்த்தி ஆகியோர் வியாபாரத்தின் மூலம் ஆண்டுக்கு, 3.7 கோடி ரூபாய் வருமானம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.திருப்பதிக்கு தங்க கிரீடம் உட்பட பல கோவில்களுக்கு வாரிவழங்கியுள்ளார்.இத்தகைய புகழுடன் விளங்கி வரும் ரெட்டி சகோதரர்களால் பா.ஜ., மேலிடத்தில் தற்போது புகைச்சல் கிளம்பியது. இவர்கள் இருவரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாவுக்கு வேண்டியவர்களா அல்லது ராஜ்யசபா பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லிக்கு வேண்டியவர்களா என்பதை பா.ஜ., வெளிப்படுத்த வேண்டிய அளவுக்கு விவாதம் எழுந்திருக்கிறது.

No comments: