மேற்கு வங்கத்தில், 1977 முதல், 2011 வரை, 33 ஆண்டுகள் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
இந்த தேர்தலில் மக்கள் நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிப்பர் என்று, மிகுந்த எதிர்பார்ப்புடன் மம்தா உள்ளார்.
அதற்கேற்ப, அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இடதுசாரிகள் மீது அவர் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகள், மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.மேற்கு வங்கத்தில் தேர்தல் குறித்த எந்த செய்தியாக இருந்தாலும், மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மேற்கு வங்க தேர்தல் குறித்த செய்திகளை, உள்ளூர் பத்திரிகைகள் மட்டும் இல்லாமல், தேசிய பத்திரிகைகளும், அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.தேசிய கட்சிகளும் மேற்கு வங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. தேசிய தலைவர்கள் பலர், மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள், எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து, பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள், மக்களிடையே செல்வாக்கை இழந்திருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புவதையே, இது வெளிக்காட்டுகிறது என்று, எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன.தேர்தல் பிரசாரத்தின் போது, அரசியல் தலைவர்கள் பேசும் பேச்சுகளையும் மக்கள் மிகுந்த கவனமுடன் கேட்டு வருகின்றனர். இரு தரப்பிலும் தலைவர்கள் பிரசாரத்தின் போது முன்வைக்கும் தகவல்கள் குறித்த விவாதம், பலமாக மக்களிடையே எதிரொலிக்கிறது.எதிர்க்கட்சிகளின் தீவிர பிரசாரம், மக்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் ஆகியவற்றால், ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி கலக்கத்தில் உள்ளது.
கடந்த, 33 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கே இந்த முறையும் அரியணையை கொடுத்து, வெற்றி வரலாற்றை தொடரச் செய்வரா அல்லது மாற்றத்தை கொடுத்து, இடதுசாரிகளை வீட்டுக்கு அனுப்புவரா என்பதை, நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment