தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில், ஆளுயர கட்-அவுட்களோ, ஆடம்பர பேனர்களோ வைக்கப்படவில்லை. ஆனால், கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் விழாவில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். போயஸ்கார்டனில் இருந்து விழா மண்டபத்துக்கு ஜெயலலிதா வந்த போது, போக்குவரத்தை தடை செய்யவில்லை. இதனால், அவரது கார் கடற்கரை சாலையில் வாகன நெரிசலில் சிக்கி கொண்டது. பின், போக்குவரத்து சரி செய்யப்பட்டது.போக்குவரத்து நெரிசலில் கவர்னர் காரும் சிக்கியதால், அவரது வருகை சில நிமிடங்கள் தாமதமானது. விழா மண்டபம் அமைதியாக கவர்னரை எதிர்நோக்கி இருந்தது. இதனால், விழா மேடையில் ஜெயலலிதா மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்புக்காக சில நிமிடங்கள் காத்திருந்தனர்.விழா மண்டப முன்வரிசையில் சசிகலா, சுலோச்சனா சம்பத், சோ ராமசாமி, சுதீஷ், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், அஜித்சிங், சந்திராபாபு நாயுடு, நரேந்திர மோடி, ஏ.பி.பரதன், ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார், ராதிகா மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் இருந்தனர். கவர்னரிடம் அறிமுகமாகி கைகொடுத்த போது, ஜெயலலிதா, பெண் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம் ஆகியோர் கைகொடுக்காமல், தமிழர் மரபுப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் பதவியேற்று உறுதிமொழிகளை வாசிக்கும்போது, மரியம் பிச்சை மிகவும் நிறுத்தி தாமதமாக ஒவ்வொரு வார்த்தையாக வாசித்தார். கொஞ்சம் டென்ஷனாக காட்சியளித்த முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவிலை சேர்ந்த கருப்பசாமி பதவியேற்க வந்ததை பார்த்தவுடன் சிரித்து விட்டார். குள்ளமான அவர் நெற்றியில் விபூதியிட்டு, கடகடவென உறுதிமொழி ஏற்றதை பார்த்து, சோ ராமசாமி கையை இருபக்கமும் அசைத்து உற்சாகம் ஊட்டினார். நகைச்சுவை சுபாவங்களுக்கு பெயர் போன கருப்பசாமி, அமைச்சராக பதவியேற்ற போது, ஜெயலலிதா உட்பட அரங்கத்தினர் அனைவரும் கலகலப்பாக சிரித்தனர். இதேபோல், முனுசாமி அமைச்சராக பதவியேற்று, உறுதிமொழி ஏற்க வந்த போது சட்டையிலிருந்த கண்ணாடியை எடுத்து மெதுவாக வாசித்ததை பார்த்ததும், ஜெயலலிதா புன்முறுவலிட்டார்.
ஜெயலலிதா பதவி ஏற்றதும், மண்டபத்தில் இருந்த தொண்டர்கள், "அநீதியை அழித்த நீதி தேவதை, தமிழகத்தை மீட்ட தாரகை' என, கோஷமிட்டு வாழ்த்தினர். விழா மேடையின் பின்புறம் பச்சை வண்ணத்தில், மிக எளிமையாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்திலோ, வெளியிலோ ஆடம்பர கட்-அவுட்டுகள், ஆளுயர வாழ்த்து பேனர்கள், தோரணங்கள் போன்ற அனாவசிய செலவுகளும், தேவையற்ற கூச்சல், குழப்ப ரகளைகளும் இல்லை.ஆனால், மண்டபம் நிரம்பியதால் ஆயிரக்கணக்கானோர் வெளியே கடற்கரையில் வைத்திருந்த டிஜிட்டல் திரையில் நிகழ்ச்சிகளை பார்த்தனர். கடற்கரை முழுவதும் பதவியேற்புக்காக வந்தோர் நிரம்பி மக்கள் அலையாக காணப்பட்டது.
ஜெ., காதில் மினுமினுத்த கல் கம்மல் : தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, விழா மேடையில் மிகவும் எளிமையாக காணப்பட்டார். சிவப்பு நிறம் கலந்த, "பிரவுன்' சேலை கட்டி வந்த அவர், புதிதாக காதில் மிகவும் சிறிய கம்மல் அணிந்திருந்தார். அதிலிருந்த கல் மினுக்கியதால் வந்த ஒளி, அவரது கம்மலை காட்டிக் கொடுத்தது.கடந்த 1996ல், சொத்து சேர்ப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய ஜெயலலிதா, "நான் இனி எந்த நகையும் அணிய மாட்டேன்' என்றார். அதன்படி, நகை அணியாமல் இருந்து வந்தார். சில ஆண்டுகளாக நேரம் பார்க்க, கைக்கடிகாரம் மட்டும் அணிந்தார். இதுவரை நகை அணியாமல் இருந்த நிலையில், தற்போது சிறிய கம்மல் அணிந்துள்ளார். எப்போதும் கண்ணாடியுடன் காணப்படும் அவர், நேற்று உறுதிமொழி வாசிக்கும் போது மட்டும் கண்ணாடி அணிந்தார்.
No comments:
Post a Comment