Search This Blog

Monday, May 16, 2011

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' : காங்., தொண்டர்களின் புது கோஷம்

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் தோல்விக்கு தி.மு.க.,வின் ஊழல், மக்கள் விரோதப் போக்கு தான் காரணம்; கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புது கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், 63 தொகுதிகளில் போட்டியிட்டது; தேர்தல் முடிவு வெளியானது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தான் போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். முக்கிய தலைவர்களான மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஈரோடு மேற்கு தொகுதியிலும், பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் தொகுதியிலும், திருநாவுக்கரசர் அறந்தாங்கி தொகுதியிலும், யசோதா ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியைத் தழுவினர்.

விளவங்கோடு தொகுதியில், பாரதிய ஜனதா பெற்ற, 37 ஆயிரம் ஓட்டுகள், பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் யோகானந்தத்துக்கு கிடைத்த, 22 ஆயிரம் ஓட்டுகள், குளச்சல் தொகுதியில் பாரதிய ஜனதா பெற்ற, 35 ஆயிரம் ஓட்டுகள், கிள்ளியூரில் அ.தி.மு.க.,வை மூன்றாமிடத்துக்கு தள்ளி, இரண்டாமிடம் பெற்ற பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த, 32 ஆயிரம் ஓட்டுகள், ஓசூரில் சுயேச்சையாக போட்டியிட்டு சத்யா பெற்ற, 24 ஆயிரம் ஓட்டுகள் என, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பிரிந்த ஓட்டுகளே காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக இருந்தன. இல்லையெனில், தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது.

"இத்தனைக்கும் காரணம், மாநில தலைவர் தங்கபாலுவின் செயல்பாடுகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை தராத தி.மு.க.,வுடன் தொடர்ந்த கூட்டணி தான். தொடர்ந்து இதே கூட்டணியில் இருந்தால், கட்சி வளர்ச்சி பாதிக்கும். எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறுவது தான் வழி' என்கின்றனர், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்.

No comments: