Search This Blog

Tuesday, May 10, 2011

தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

"தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் அதேபோன்று தான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களில் சிலர், பாடவாரியாக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன்தான், தரவரிசைப் பட்டியலில் அவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இதே அளவுகோலை, பாடவாரியான தரவரிசைப் பட்டியல் தயாரிப்புக்கு தேர்வுத்துறை அதிகாரிகள் பின்பற்றாதது, தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது.

இத்தகைய போக்கு தொடர்ந்தால், தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இதனால், தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற பாரதியாரின் வார்த்தைகள் மெய்யாகி விடும் ஆபத்து உள்ளது.இப்படிப்பட்டதொரு நிலை ஏற்பட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே தரவரிசை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் பரிசுகளும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழை ஒரு பாடமாக படித்து, செம்மொழியாம் தமிழ் மொழி செழித்து வளர வழி பிறக்கும்.

இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் இருக்க ஒரே தீர்வு, தமிழை கட்டாயப்பாடமாக்குவது தான். தமிழ் மொழிப் பாடத்தை ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒவ்வொரு வகுப்புக்கு கட்டாயப் பாடமாக நீட்டித்து வருவதற்குப் பதில், அனைவரும் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments: