Search This Blog

Wednesday, July 7, 2010

கக்கன் நூற்றாண்டு விழா

மதுரையில், முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழாவை எந்த இடத்தில் கொண்டாடுவது என்பதில் காங்கிரசாருக்குள் மோதல் எழுந்துள்ளது.

காங்கிரஸ் 125வது ஆண்டு விழாவையொட்டி, பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் , ஜூலை 17ல் காமராஜர் விழா, மதுரையில் ஜூலை 31ல் முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா, கோவையில் தியாகி சத்தியமூர்த்தி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதியில், சென்னையில் நடக்கும் நூற்றாண்டு நிறைவு விழாவில், அகில இந்திய தலைவர் சோனியா பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில், காங்கிரசார் வாசன், சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனநாச்சியப்பன் என தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். ஒற்றுமையாக இருந்து கக்கன் விழாவை கொண்டாடுவதாக அறிவித்தாலும், யார் முன்னின்று நடத்துவது என்பதில், கோஷ்டிகளுக்குள் மறைமுக போட்டி நிலவுகிறது. கக்கன் பிறந்த நாளன்று மேலூர் அருகே தும்பைபட்டியிலுள்ள மணிமண்டபத்திற்கு, ஒவ்வொரு கோஷ்டியினரும் தனித்தனியாக சென்றனர். தற்போது ஒவ்வொரு கோஷ்டியினரும், தங்கள் தலைவர் படங்களுடன் பிளக்ஸ், சுவர் விளம்பரங்களை செய்து வருகின்றனர். கடந்த 4ம் தேதி தங்கபாலு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கோஷ்டியினரும் கலந்து கொண்டாலும், விழா பொறுப்பை ஏற்று நடத்த தயார் என சிதம்பரம் ஆதரவாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால், அதுவே அவர்கள் அணியை வளர்க்க வாய்ப்பாக போய் விடும் என மற்ற கோஷ்டியினர் தயங்கினர்.

கக்கன் விழாவிற்காக, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தை ஒதுக்கும்படி சிதம்பரம் ஆதரவாளரான விஸ்வநாதன் எம்.பி., ஜூன் 16ம் தேதி விண்ணப்பித்தார். அவருக்கு, ஜூன் 23ம் தேதி அனுமதி கிடைத்தது. அந்த இடத்தில் விழா நடத்தினால், அவர்களுக்கு சாதகமாகும் என மற்ற கோஷ்டியினர் கருதினர். மதுரை வடக்குமேல மாசி வீதியில் விழா நடத்த அனுமதி கோரி, நகர் தலைவர் தெய்வநாயகம்(வாசன் ஆதரவாளர்) போலீஸ் கமிஷனரிடம் தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற்றார். இதற்கு தங்கபாலு ஆதரவாளர்களான வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ்பாண்டியன் போன்றோர் ஒப்புக் கொண்டனர். விழா அழைப்பிதழில், இந்த இடத்தை குறிப்பிட்டு அச்சிடும்படி மேலிடத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

வாசன் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்கள் கூறியதாவது: பொதுவாக அரசியல் நிகழ்வுகள் வடக்குமேல மாசி வீதியில் நடக்கின்றன. கட்சியினர் வந்து செல்லவும் வசதியாக இருக்கும். அந்த இடத்தை தேர்வு செய்தோம். மற்றபடி உள்நோக்கம் இல்லை, என்றனர். சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறுகையில், ""மருத்துவக் கல்லூரி மைதானத்தை கேட்டுள்ளதாக முன்கூட்டியே தெரிவித்தும், தங்கபாலு, வாசன் ஆதரவாளர்கள் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை,'' என்றனர்.

No comments: