Search This Blog

Sunday, July 18, 2010

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் திடீர் தள்ளிவைப்பு


உட்கட்சி தேர்தல் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார். இதனால், உட்கட்சி தேர்தல் நடக்குமா அல்லது கோட்டா சிஸ்டத்தில் பங்கீடு செய்யப்படுமா என்ற குழப்பம், அக்கட்சித் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுமென, தேர்தல் தேதி அட்டவணையை நேற்று முன்தினம் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்தார்.

அன்றிரவு தேர்தல் தேதி மாற்றி வைக்கப்பட உள்ளது என, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தங்கபாலு தெரிவித்த அறிவிப்பில், ஓட்டுச்சாவடி மற்றும் ஊராட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் தேர்தலுக்கு எப்படி தயாராக முடியும்? என்ற கேள்வியை எதிர்கோஷ்டிகள் தரப்பில் எழுப்பப்பட்டன.

உட்கட்சி தேர்தல் குறித்து தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஒருவர், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்திடம் புகார் தெரிவித்தார்.அதேபோல், முன்னாள் அமைச்சர் ஒருவர் மனு தாக்கல் செய்வதற்கும், மனுவை திரும்ப பெறுவதற்கும் போதுமான கால அவகாசம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் மேலிடத்திற்கு தெரிவித்தார். மற்றொரு மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள், கட்சித் தலைமையின் தன்னிச்சையான இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என முடிவு எடுத்தனர்.

இந்நிலையில் டில்லி மேலிடம், கோஷ்டித் தலைவர்களின் புகார்களை ஏற்றுக் கொண்டதால், உட்கட்சி தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு, "புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்' என்ற அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் தங்கபாலு ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்தல் மூலம் உள்ளாட்சி முதல் மாநில நிர்வாகிகள் வரை பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் தங்கபாலு ஆதரவாளர்கள் சில மாவட்டங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக இருந்தனர்.ஆனால், கோஷ்டித் தலைவர்களில் சிலர் உட்கட்சி தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. கோட்டா சிஸ்டத்தில் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேர்தலை நடத்தினால், தங்களுக்கு வேண்டிய ஆதரவாளர்களுக்கு பதவி கிடைக்காமல் போய்விடும் என்பதால், தேர்தல் நடத்த வேண்டாம் என்பதில் சில தலைவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இந்த மாதம் இறுதிக்குள் வட்டம், நகரம், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதேபோல், அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்தலும் நடத்தி முடிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்தலுக்கு அஸ்திவாரமாக விளங்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம், மாவட்ட அளவில் மட்டுமே நடந்துள்ளது.

வட்டார அளவில் தேர்தல் நடக்கும் போது, வட்டார தேர்தல் அதிகாரி நியமிக்க வேண்டும், ஓட்டுச்சாவடி அளவில் தேர்தல் நடக்கும் போது, ஓட்டுச்சாவடி தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்த பணிகளை இனி முடித்து விட்டு, தேர்தலை ஜனநாயக முறையில் நடத்துவதற்கும் அக்கட்சியில் போதுமான அவகாசம் இல்லையென தொண்டர்கள் புலம்புகின்றனர்.எனவே, உட்கட்சி தேர்தல், தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் போல அந்தந்த பகுதிகளில் பகிரங்கமாக நடக்குமா அல்லது கோட்டா சிஸ்டத்தில் பதவிகள் பங்கீடு செய்யப்படுமா?

No comments: