Search This Blog

Thursday, July 1, 2010

ஜாதி வாரி கணக்கெடுப்பு

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து உறுதியான முடிவு எடுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து திணறி வருகிறது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை மீண்டும் கூடி, இதுகுறித்து விவாதிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1931ல், இந்தியாவில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்புகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் இட ஒதுக்கீடு, நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் ஆகிய நடைமுறைகளின் போது, ஜாதி வாரியான புள்ளி விவரங்களை கணக்கிடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில், 2010-11ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில், ஜாதி வாரியான கணக்கெடுப்பு முறை சேர்க்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., ஆகிய கட்சிகள் இதை வலியுறுத்தி வருகின்றன. காங்கிரசில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட ஒரு தரப்பினரும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள், வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், இந்த கோரிக்கையை முன்வைத்து பெரும் புயலை கிளப்பவும் திட்டமிட்டுள்ளன. காங்கிரசில் மற்றொரு தரப்பினர், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "ஜாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது' என, அவர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து, ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, இதற்கு முன் ஓரிரு முறை கூடி இதுகுறித்து விவாதித்தது. இருந்தாலும், எந்தவொரு உறுதியான முடிவும் அந்த கூட்டங்களில் எடுக்கப்படவில்லை.

மீண்டும் ஒத்திவைப்பு: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று மீண்டும் அமைச்சரவை குழு கூடி, இந்த பிரச்னை குறித்து விரிவான ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபல் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் மொய்லி கிளம்பிச் சென்றார். மம்தா பானர்ஜி, சரத் பவார், பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சரவை குழு, இதுகுறித்து 90 நிமிடங்கள் விரிவான ஆலோசனை நடத்தியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விளக்கமாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு தேதியில் மீண்டும் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments: