Search This Blog

Monday, July 5, 2010

"பந்த்' 15 ஆயிரம் பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய "பந்த்' பிசுபிசுத்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு, பஸ், ரயில் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் முடங்கவில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி, பா.ஜ., - கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்று ஒரு நாள், நாடு தழுவிய, "பந்த்'திற்கு அழைப்பு விடுத்தன.தமிழகத்தில், அ.தி.மு.க., - கம்யூனிஸ்டுகள் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், "பந்த்'துக்கு அழைப்பு விடுத்தன. ஆனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டது.இதனால், தலைநகர் சென்னையில் பஸ், ரயில் மற்றும் ஆட்டோ போக்குவரத்து முழு அளவில் நடந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் முடங்கவில்லை. எதிர்க்கட்சியினர், முக்கிய இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., மகேந்திரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் 50 பெண்கள் உள்ளிட்ட 200 பேர், சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர்.கிண்டி ரயில் நிலையத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தின் போது, சிலர் ரயில்கள் மீது கல் வீசி தாக்கினர். ரயில் நிலையத்தின் மூன்று பிளாட்பாரங்களிலும், 700க்கும் மேற்பட்டவர்கள் ரயில்கள் முன் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அண்ணா சாலை, ஸ்பென்ஸ்சர்ஸ் சந்திப்பில், பா.ஜ., கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர், அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.சமையல் காஸ் சிலிண்டரை பாடையில் எடுத்து வந்து, போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்த மறியல், ஆர்ப்பாட்டத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் கைதாயினர்.திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 2,200 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா செல்லும் பஸ்கள், குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டன. ஆந்திராவில் சில பகுதிகளுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.சில இடங்களில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன.

கன்னியாகுமரியில் எட்டு பஸ்களும், மதுரை மற்றும் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.கடைகள், பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், கடைகளை கட்டாயப்படுத்தி மூடச் சொன்னவர்களும் என 270 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில், 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த ஆர்ப்பாட்டம், மறியல்களில் முழு வீச்சில் அ.தி.மு.க.,வினர் பங்கேற்கவில்லை என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.புதுச்சேரி: புதுச்சேரியில், "பந்த்' ஓரளவிற்கு முழுமையாக நடந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பஸ்கள் மட்டுமே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ., எம்.எல்.ஏ.,க்கள் விசுவநாதன், நாரா. கலைநாதன் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். காரைக்காலில் கடை, தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.

மறியல் "கூட்டணியில்'ஒதுங்கிய அ.தி.மு.க., : மதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் செய்தபோது, அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டனர்.மதுரையில், நேற்று காலை 9 மணி முதல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சியினர், ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவாயில் அருகே வரத்துவங்கினர். அவர்களை, ரயில்வே ஸ்டேஷனில் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர்.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகிகள் மறியல் செய்யாமல், ஒதுங்கிக் கொண்டதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தனர்.போலீசார் கூறியதாவது:வரும் 13ல் கோவையில், ஜெ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க.,வினர் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோவைக்கு செல்ல மதுரை அ.தி.மு.க.,வினர் இப்போதே தயாராகி வருகின்றனர்.மறியலில் ஈடுபட்டு கைதானால், ஒருவேளை போலீசார், "ரிமாண்ட்' செய்து விடுவார்களோ என்று கருதியே அ.தி.மு.க.,வினர் நேற்று மறியலில் ஈடுபடாமல் ஒதுங்கினர்.இவ்வாறு போலீசார் கூறினர்.அ.தி.மு.க., செயலர் செல்லூர் ராஜு கூறுகையில், "மக்களுக்கான போராட்டம் என்பதால், அவர்கள் பாதிக்கும் வகையில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று ஜெ., உத்தரவிட்டார். இதன் காரணமாகவே நாங்கள் மறியலில் ஈடுபடவில்லை' என்றார்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பந்த்:109 பெண்கள் உட்பட 916 பேர் கைது : சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புறநகர் பகுதியில் 109 பெண்கள் உட்பட 916 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.பா.ஜ., சாலை மறியல்: தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பா.ஜ., மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 54 பேரை, போலீசார் கைது செய்து, அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மாலை அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.கிழக்கு கடற்கரை சாலையில் பந்த்: அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளடக்கிய பகுதியில் காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும், மருந்து கடை, பால் கடை மற்றும் உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அடையாறு பகுதியில் திறந்திருந்த உணவகத்தை மூடச்சொல்லி வற்புறுத்திய எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரை பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் எச்சரித்து அனுப்பினர். பஸ் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. மாலை 6 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன.கம்யூ., தொண்டர்கள் கைது: அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் "பந்த்'தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்திலும் எவ்வித பாதிப்பில்லை.அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இ.கம்யூ., தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி பஸ் நிலையம் எதிரே மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.வடசென்னை: வடசென்னையின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் பஸ், லாரி போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. பந்த் காரணமாக மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மாதவரம் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் தலைமையில் 70 பேரும், மணலியில் 79 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தேவைப்பட்டால் இடதுசாரிகளுடனும் கைகோர்ப்போம்: கட்காரி

மக்கள் பிரச்சனைக்காக இடதுசாரிகளுடன்‌ கை கோர்க்க தயாராக உள்ளோம் என்று பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசினார்.

மத்திய அரசை கண்டித்து பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளும், இடதுசாரியினரும் நடத்திய பந்த் காரணமாக டில்லியில் இயல்பு வாழ்க்கை முழு அளவில் முடங்கியது. மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். பந்த் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர் கட்காரி, கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜாவேத்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், இடதுசாரிகள், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம் உள்ளிட்ட பல கட்சிகள் மற்றொரு அணியாகவும் பந்த் அறிவித்திருந்தன.தலைநகர் டில்லியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

முக்கிய பகுதிகளான சாந்தினிசவுக்கில் பா.ஜ.,வும் மற்றும் ஐ.டி.ஓ.,வில் இடதுசாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.கிரேட்டர் கைலாஷ் மற்றும் கன்னாட்பிளேஸ் பகுதி மார்க்கெட்டுகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மேற்கு டில்லி பகுதியில் பா.ஜ.,வினர் பஸ் மறியலில் ஈடுபட்டதால், மக்கள் அவதிக்குள்ளாயினர். அதேபோல ஜனக்புரி மெட்ரோ நிலையத்தை பா.ஜ.,வினர் இழுத்து பூட்டிவிட்டனர். 15 நிமிடங்களுக்கு பிறகு போலீசார் வந்து தலையிட்டதன் பேரில், மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

சாந்தினி சவுக்பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "மக்களின் பிரச்னைக்காக யாருடன் வேண்டுமானாலும் பா.ஜ., கைகோர்க்க தயாராக உள்ளது. தேவைப்பட்டால் இடதுசாரி கட்சிகளுடனும் பேச தயாராக உள்ளேன்' என்றார்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.,வும் இடதுசாரிகளும் ஒரே நாளில் ஒருங்கிணைந்து பந்த நடத்தியுள்ளன. கடந்த ஏப்ரலில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூட, இடதுசாரிகள் மட்டுமே தனியாக பங்கேற்றன.நேற்றைய பந்த் குறித்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் நிலோத்பல் பாசு கூறும்போது, "காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் பந்த் முழு அளவில் வெற்றியும், மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. "பந்த்'திற்கு முந்தைய தினம் பிரணாப் முகர்ஜி, ஒரு பைசா கூட விலையை குறைக்க மாட்டோம் என்று கூறினார். அவருக்கு மக்கள் சரியான பதிலடியை தந்துள்ளனர்' என்றார்.டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவும் கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த பந்த் காரணமாக வர்த்தகத் துறையினருக்கு டில்லியில் 600 கோடி ரூபாய் நஷ்டம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

No comments: