Search This Blog

Tuesday, July 13, 2010

பிரம்மாண்ட கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்

தி.மு.க., அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்துமே மாயத்தோற்றங்கள். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் பதுக்கல் முறைகேடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோவையில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார். கோவை நகரமே குலுங்கும் அளவுக்கு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க.,வையும், மாநில அரசையும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். காங்கிரசையோ, மத்திய அரசையோ அவர் விமர்சிக்கவில்லை.

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்வெட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம், கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று பகலில்  நடந்தது.

ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பிரமாண்ட கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் தமிழகம், தமிழ்மொழி, தமிழர்கள் வளர்ச்சியடையவில்லை. ஆனால், "தமிழ்' என்ற பெயரைச்சொல்லி ஒரு குடும்பம் மட்டும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிபோய்கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் தமிழின விரோத செயல்களை பட்டியலிடுபவர்கள், தாக்கப்படுகிறார்கள். தமிழை வழக்காடு மொழியாக்கு, என்று கூறுவோர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தி.மு.க., அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகளாகிவிட்டன; ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம்.பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா, என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின், ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும். தி.மு.க., அரசின் தோல்விகள் ஏராளம்.

அரசின் சாதனைகள் அனைத்தும் மாயத்தோற்றங்கள். மனிதன் உணவின்றி வாழமுடியாது. சாப்பிட அரிசி மட்டும் இருந்தால் போதாது. பருப்பு, உப்பு, மிளகாய், மசாலா, காய்கறிகளும் தேவை. இவற்றை சமைக்க மண்ணெண்ணெய் அல்லது எரிவாயு தேவை. இவற்றின் விலை நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துவிட்டது. உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் 17 விழுக்காடு உயர்ந்துள்ளதாக, அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருட்கள், தற்போது 240 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த அளவுக்கு விலைவாசி ஏன் உயர்ந்தது? இதற்கு பல காரணங்கள் உள்ளன.விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லை. அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை பம்பு மூலம் இறைக்க மின்சாரம் இல்லை. விவசாயப்பணிகள் முறையாக நடைபெறாததால், விவசாய தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகருக்கு செல்கிறார்கள்.

இதன் விளைவாக விவசாய பணிகளும், உற்பத்தியும் குறைந்துவிட்டன. தி.மு.க., ஆட்சியில் சட்டம்  ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளைகள் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழகம், இப்போது தரம் தாழ்ந்துவிட்டது. தமிழகத்தை பார்த்து இந்தியாவே வெட்கித் தலைகுனிகிறது. இந்நிலை மாறவும், தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கவும், வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளியுங்கள்; கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வரவேற்புரை நிகழ்த்திய பின், பேசத்துவங்கிய ஜெயலலிதா, ஒரு மணி நேரம் வரை வேகம் குறையாமல் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.தனது உரையில், காங்கிரசை விமர்சிக்கவே இல்லை. மத்திய அரசை விமர்சிப்பதையும் தவிர்த்தார்.பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை போன்று மிகவும் பொறுமையாக, தி.மு.க., அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் எடுத்துக்கூறி, அத்திட்டங்களால் எவ்வித பயனுமில்லை என முழங்கினார்.  பேச்சுக்கு இடையே அவ்வப்போது தொண்டர்களை பார்த்து கேள்விகளை எழுப்பி, பதில் பெற்றார்.சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அதே விமானத்தில் உடனடியாக சென்னை திரும்பினார்.

வெள்ளிச்செங்கோல், வீரவாள் பரிசு :  கோவையில் அ.தி.மு.க., நடத்திய கண்டன பொதுக்கூட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற இக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராமன் 5 கிலோ எடையில் உருவாக்கிய வெள்ளிச் செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது ஜெயராமன் கூறியதாவது: கடந்த 1986 ம் ஆண்டு ஜூலை 13 ம்தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா செங்கோல் வழங்கினார். அந்த செங் கோலை அவர் வைத்துக் கொள்ளாமல் மீண்டும், ஜெ.,விற்கு திரும்ப வழங்கினார்.அந்த நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் அதே தேதியில் அதே போல செங்கோலை, நான் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.,க்கு செங்கோல் வழங்குகிறேன், என்றார். வீரவாள்: எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி பொதுச்செயலாளர் கே.ஆர்.ஜெயராம், வெள்ளியில் தயாரிக்கப் பட்ட வீரவாளை ஜெ.,விற்கு பரிசாக வழங்கினார். இது மூன்று கிலோ எடை கொண்டது. வாள் தனியாகவும், உரை தணியாகவும் இருந்தது. இரண்டரை அடி நீளம் கொண்டது.கூட்டத்தாரை நோக்கி வீரவாளை உயர்த்தி காண்பித்து வெற்றி நமதே என்று கூறினார், ஜெ.,

கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் : அ.தி.மு.க., விலுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் கோவையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து மேடைஏறி அமரச்செய்தனர். பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பே மேடைக்கு, சுலோசனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன் முதல் வரிசையில் அமர்ந்தனர். அவர்களை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பொன்னையன், செம்மலை, கருப்புசாமி, தளவாய்சுந்தரம், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இலக்கிய அணித் தலைவர் பழ., கருப்பையா, மைத்ரேயன், துரைகோவிந்தராஜன், சோழன் சீத்தாபழனிசாமி ஆகியோர் அமர்ந்தனர்.ஜெ., மேடையில் பேசத்துவங்கும் போது வேலுசாமி, ஜெயராமன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சேகர்பாபு, மலரவன், சின்னச்சாமி, வேலுமணி உள்ளிட்டோர் மேடை ஏறிஅமர்ந்தனர்.வழக்கமாக ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் சிலருக்கு மட்டுமேமேடையில் அமருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.ஆனால், கோவையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாகுபாடுகளை மறந்து, கட்சி வளர்ச்சிப்பாதையில் செல்வதற்காக அனைத்து தரப்பை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மேடையில் அமரச்செய்தனர். மேடையின் மேற்பகுதியில் ஜெ., நின்று பேசும் இடத்தில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தது.இது தவிர மேடையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தலா இரண்டு வீதம் நான்கு ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டிருந்தன.

No comments: