Search This Blog

Wednesday, July 28, 2010

ரேஷன் கடைகளில் வீணாகும் அரிசி, கோதுமை அள்ளிவிட அரசு முடிவு

அரசு உணவுக் கிடங்குகளில், அதிகளவிலான உணவுப் பொருட்கள் நிரம்பி வழிவதால், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தின் மூலம், 30 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமையை அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.

அரசு உணவுக் கிடங்குகளின் கொள்ளளவு, மூன்று கோடியே 19 லட்சம் டன் மட்டும் தான். ஆனால், தற்போதைய நிலையில் அவற்றில் ஐந்து கோடியே 78 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை இருப்பதால், உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.மேலும், சமீபத்தில் உ.பி., உட்பட சில பகுதிகளில், மழையில் நனைந்த நிலையில், திறந்த வெளிகளில் உணவு தானியங்கள் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுவாக விசாரணைக்கு வந்த போது, உணவுப் பொருட்கள் கிடைக்காத ஏழைகளுக்கு தரலாமே, உணவு  தானியத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பி கவலை தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து ஏற்கனவே மத்திய அரசும்  முடிவு காண விரும்பியது.அதன்படி, ஏ.பி.எல்., என்ற வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு 10 லிருந்து 35 கிலோ வரையிலான அரிசி 8 ரூபாய் 30 காசுக்கும், அதே அளவிலான கோதுமை, 6 ரூபாய் 10 காசுக்கும் வழங்கப்படும். இந்த நடைமுறை ஆறு மாதங்களுக்கு இருக்கும். தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மேலும் சலுகை விலையில் தரும் பட்சத்தில் சலுகை கூடுதலாக கிடைக்கும்.

இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏ.பி.எல்., குடும்பங்களுக்கு பொது வினியோக திட்டத்தில், அரிசி, கோதுமை வழங்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.  அதற்கு தேவைப்படும் அரிசி அல்லது கோதுமை அளவை மாநிலங்கள் நிர்ணயித்து முடிவு செய்ததும் அதன்படி அனுப்பப்படும்.சர்க்கரை விலை: சர்க்கரை விலை நிர்ணயத்தை முடிவு செய்து, சர்க்கரை ஆலைகள் வசமே ஒப்படைப்பது, இந்த ஆண்டின் கரும்பு உற்பத்தியைப் பொருத்துத்தான் அமையும். தற்போது சர்க்கரை மீதான ஆதார விலை முதல், பொதுச் சந்தையில் விற்பது வரையிலான விலை வரை மத்திய அரசு தான் நிர்ணயம் செய்கிறது.

இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு(ஐ.எஸ்.எம்.ஏ.,) மற்றும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (என்.எப்.சி.எஸ்.எப்.,) ஆகிய இரண்டு அமைப்புகளும், மாதா மாதம் பொது வினியோகத் திட்டத்துக்கு சர்க்கரை ஆலைகளிடமிருந்து வாங்கும் திட் டத்தைக் கைவிட்டு, பொதுச் சந்தையில் வாங்க வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திலிருந்து சர்க்கரையை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.விளைச்சல் ஆண்டு இந்த செப்டம்பரோடு முடிவதால், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த ஆண்டின் மொத்த சர்க்கரை உற்பத்தி பற்றிய தகவல்களைத் திரட்டி விடுவேன். அதன் பின் சர்க்கரை உற்பத்தியைப் பொருத்துத் தான் விலை நிர்ணயத்தைக் கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும்.சர்க்கரை விலை நிர்ணயம் மீதான எந்த முடிவும், நுகர்வோர், விவசாயிகள் மற்றும் ஆலைகளை பாதிக்கும் வகையில் இருக்காது.

இதுகுறித்து சர்க்கரை ஆலைக் கூட்டமைப்புகளுடன் பேசத் தயாராக உள்ளோம். மத்தியத் தொகுப்பிலிருந்து நேபாளத்துக்கு ஒரு லட்சம் டன்னும், வங்கதேசத்துக்கு இரண்டு லட்சம் டன்னும் அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய, பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை உயர்மட்டக் குழு அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு சரத் பவார் கூறினார்.ஆனால், சர்க்கரை விலை நிர்ணயம் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், பொதுச் சந்தையில் அதன் விலை கிலோ 60 ரூபாயாக அதிகரித்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது. மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கன்யாலால் கித்வானி கூறுகையில், "இத்திட்டம், தரகர்களுக்கும் பதுக்குவோருக்கும் தான் லாபம் தரும்' என்றார்.

அரசு மீது கட்காரி புகார் : உணவு தானியங்களை சரியாக பாதுகாக்காமல், மக்க விட்டபின், அவை, மது தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்று,  பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார்.

அவர் கூறியதாவது:லட்சக்கணக்கான டன் அரிசி, கோதுமை அரசு உணவுக் கிடங்குகளிலும் வேறு பல இடங்களிலும் சீரழிகின்றன. மக்கிப் போன அரிசி, கோதுமையை மது தயாரிக்கும் கம்பெனிகளுக்கு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து மத்திய அரசு கவலை கொள்ளவில்லை.விவசாயிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால் மக்கிப் போன தானியங்கள், கிலோ இரண்டு ரூபாய்க்கு மதுபான தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன.பொருளாதார மேதைகள் பலர் ஆட்சி புரிந்தும் தற்போதைய ஆட்சியில்  பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், பணவீக்கம் 3 சதவீதம் தான் இருந்தது.

No comments: