காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து வரும், ஆந்திர காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க, மாநில காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மறைந்த பின், அவரது தீவிர ஆதரவாளர்களாக கருதப்படும் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். கொண்டா சுரேகா என்ற பெண் அமைச்சர், ரோசய்யாவின் ஆட்சியின்போது, ஜெகன்மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடா மற்றும் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோதும், ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் மாநில அளவில், "ஆறுதல் யாத்திரை' பயணம் சென்றபோதும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரை நேரில் சந்தித்துப் பேசினர்.
ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய மாநில காங்கிரஸ் தலைமையும், முதல்வர் கிரண்குமார் ரெட்டியும், காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.,க்கள் மீது கட்சித் தலைவர் சோனியாவிடம் நேரில் புகார் செய்தனர்.
மாநில சட்டசபையிலும் இவர்கள் தனி பிரிவாக செயல்பட்டு சில நேரங்களில் முதல்வருக்கு எதிராக பேசி வந்துள்ளனர். கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற பெயரில் புதுக் கட்சியை துவக்கியபோதும் 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். சிலர், சொந்த ஊர்களில் இருந்தபடியே ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடப்பா, புலிவெந்துலா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளதால், நேற்று முன்தினம் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரிக்கும், எம்.எல்.ஏ.,க்களான கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாராயண ரெட்டி (ஜம்மலமடுகு), ஸ்ரீகாந்த் ரெட்டி (ராயசோடி), அமர்நாத ரெட்டி (ராஜம்பேட்டை), முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா, வாரங்கல் மாவட்டம் (பரகால தொகுதி) ஆகிய நால்வரும் கடப்பா மாவட்டத்தில் விஜயலட்சுமி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை சீரியசாக எடுத்துக் கொண்ட மாநில காங்கிரசும், முதல்வரும், இவர்களின் எம்.எல்.ஏ., பதவியை பறிக்க துணை சபாநாயகரை சந்தித்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்கான கடிதத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். முதல் கட்டமாக இவர்களின் பதவியை பறிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த பிரசன்ன குமார் ரெட்டி, பாலநாகி ரெட்டி, சீனிவாசுலு ரெட்டி ஆகிய மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும், அவர்களின் எம்.எல்.ஏ., பதவியை ரத்து செய்யும்படி அக்கட்சியின் துணை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment