Search This Blog

Sunday, April 17, 2011

அடுத்த முதல்வர் யார்?மேற்கு வங்க தேர்தலில் மம்தா ஆதரவு அலை

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும், மேற்கு வங்கத்தை நோக்கி திரும்பியுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி, இங்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 34 ஆண்டுகளாக, மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்து வரும், இடதுசாரி கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

சிவப்பு கோட்டைமேற்கு வங்க மாநிலத்தை சிவப்பு கோட்டை என்று கூறுவது வழக்கம். அந்த அளவுக்கு, அங்கு இடதுசாரி கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ளது. மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியால், மேற்கு வங்க மாநிலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடும் முயற்சிகள் செய்தும், அங்கு இடதுசாரி கட்சிகளுக்கு, மாற்றாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

மம்தா புயல் : மேற்கு வங்க காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த மம்தா பானர்ஜி, காங்கிரசை விட்டு வெளியேறி, திரிணமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவங்கியதும் தான், கம்யூனிஸ்ட் கோட்டையில் கொஞ்சம் ஆட்டம் ஏற்பட்டது. இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை எதிர்த்து, மம்தா தீவிர அரசியல் நடத்தியதற்கு பலன் கிடைத்தது. மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்கள், கடந்த லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு, கணிசமான வெற்றி கிடைத்தது. இடதுசாரி கட்சிகளின் ஓட்டு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டது.

சிங்கூர் பூகம்பம் : சிங்கூர், நந்திகிராம் ஆகிய விஷயங்களில் இடதுசாரி கட்சி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், அந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மம்தா, அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார். இதனால், நக்சலைட் ஆதரவாளர் என்ற முத்திரையும் மம்தா மீது குத்தப்பட்டது. இதற்கு சற்றும் அலட்டிக் கொள்ளாத மம்தா, மேற்கு வங்க மாநில ஆட்சிக் கட்டிலில் ஏறுவதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்.ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றதும், மேற்கு வங்க மாநிலத்துக்கு புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் அள்ளி வீசினார். அவரின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த மற்ற மாநில அரசியல்வாதிகள், "இவர், இந்தியாவுக்கு ரயில்வே அமைச்சரா, மேற்கு வங்க மாநிலத்துக்கு ரயில்வே அமைச்சரா' என, கடும் தாக்குதலை தொடுத்தனர்.

அவர்களின் குற்றச்சாட்டுகளை எல்லாம் மம்தா பொருட்படுத்தவே இல்லை. இன்னும் கூறப்போனால், டில்லியை விட, கோல்கட்டாவில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் தான், தனது பெரும்பாலான நேரங்களை செலவிட்டார்.மம்தா எதிர்பார்த்தது போலவே, இதோ தேர்தல் வந்து விட்டது. நினைத்ததை முடித்து காட்ட, தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி விட்டார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 65 தொகுதிகளை மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டு, மற்ற தொகுதிகளில் தன் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், இதற்காக மம்தாவை குறிவைத்து, கடும் விமர்சனம் செய்தனர். வழக்கம்போல், இந்த விமர்சனங்களையும் தூக்கி எறிந்து விட்டார் மம்தா.

கருத்துக் கணிப்பு எப்படி? இன்னும் முதல் கட்ட தேர்தல் துவங்காத நிலையில், மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், "ஸ்டார் அனந்தா - நீல்சன்' நிறுவனங்கள் சார்பில் மேற்கு வங்கத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 163 தொகுதிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 457 வாக்காளர்களிடம், கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து, இம்மாதம் 5ம் தேதி வரை கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதனடிப்படையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

திரிணமுலுக்கு அமோக வெற்றி : கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் - காங்., கூட்டணி, 215 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 74 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது. இதன்படி, திரிணமுல் கட்சி, தனிப்பெரும்பான்மை பெற்று, ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

யாருக்கு எவ்வளவு ஓட்டு? கடந்த சட்டசபை தேர்தலில், இடதுசாரி கூட்டணிக்கு 48 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். அதேநேரத்தில், திரிணமுல் - காங்., கூட்டணிக்கு, இந்த தேர்தலில் 48 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் துவங்கி, அதற்கடுத்து நடந்த அனைத்து தேர்தல்களிலும், இடதுசாரி கட்சி கூட்டணியின் ஓட்டு சதவீதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.தற்போது நடக்கவுள்ள தேர்தலிலும் இது எதிரொலிக்கும். ஆச்சர்யம் அளிக்கும் வகையில், இந்த தேர்தலில் பா.ஜ., இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், கடந்த லோக்சபா தேர்தலில், 1.93 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், இந்த தேர்தலில், 6 சதவீதமாக அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மம்தாவுக்கு ஆதரவு : மம்தா பானர்ஜி முதல்வராக வர வேண்டும் என, 51 சதவீதம் பேரும், புத்ததேவ் முதல்வராக வர வேண்டும் என, 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். புத்ததேவ் எதிர்க்கட்சி தலைவராவதற்கு ஆதரவாக 44 சதவீதம் பேரும், மம்தா எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என, 33 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்தாண்டு கால இடதுசாரி கட்சி ஆட்சியில், தடுப்பூசி போடுவது மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பாராட்டும்படி இருந்ததாக 67 சதவீதம் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை நன்றாக செயல்பட்டதாக 50 சதவீதம் பேரும், சாலை வசதிகள் நன்றாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். விலைவாசி தான், மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்ததாக, 56 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு வசதிகள் மோசமாக இருந்ததாக 49 சதவீதம் பேரும், தொழில் துறை மோசமாக உள்ளதாக 47 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

எதற்காக ஓட்டு?திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதற்காக ஓட்டுப் போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, "விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்' என, பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். இடதுசாரி கட்சிகளுக்கு எதற்கு ஓட்டுப் போடுகிறீர்கள் என்ற கேள்விக்கும், பெரும்பாலானோர் அதே பதிலை தான் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பு பலிக்குமா?திரிணமுல் - காங்., கூட்டணியில், பெரும்பாலான தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகள் சிதறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஒரு மாத காலம் வரை, தேர்தல் நடப்பதால், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த கருத்துக் கணிப்பு, எந்த அளவுக்கு உண்மையை எதிரொலிக்கும் என்பது, ஓட்டும் எண்ணப்படும் நாளான, அடுத்த மாதம் 13ம் தேதி தான் தெரிய வரும்.

No comments: