Search This Blog

Sunday, April 24, 2011

இனி எந்த அணிக்கும் ஆதரவு கிடையாது: ம.தி.மு.க., முக்கிய முடிவு

எந்த கட்சிக்கும் இனி பல்லக்கு தூக்கியாக இருக்க மாட்டோம்; இனி தனித்தே செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்' என, ம.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு சொற்ப இடங்களே ஒதுக்கப்பட்டதால், அ.தி.மு.க., கூட்டணிக்கு ம.தி.மு.க., முழுக்கு போட்டது. வேறு எந்த அணியிலும் சேராமல், தேர்தலையும் புறக்கணித்தது.ம.தி.மு.க.,வின் இந்த முடிவு, தி.மு.க.,வுக்கு சாதகமானது என முதலில் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடியும் வரை, தி.மு.க.,வை ஆதரித்து ம.தி.மு.க.,வினரோ, அதன் பொதுச் செயலர் வைகோவோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை."வைகோ என் நல்ல நண்பர், எப்போதும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருந்தார். அப்போதும், அ.தி.மு.க., அணிக்கு வைகோ எந்த ஆதரவையும் தெரிவிக்க வில்லை.சட்டசபைத் தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கும் என வைகோ அறிவித்தவுடன், ம.தி.மு.க.,வில் தொண்டர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். ஆனால், வைகோவின் இந்த முடிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததும், அந்த அதிருப்தி மறையத்துவங்கியது.தமிழகத்தில் உள்ள அரசியல் சார்பு அல்லாதவர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் வைகோவின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இதனால், ம.தி.மு.க.,வில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்குப் பின், ம.தி.மு.க., எப்படி இயங்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ம.தி.மு.க., எப்போதும் உறுதியாகத்தான் இருந்தது. 2004ல், பா.ஜ., கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றது. அப்போதும் நாங்கள் பா.ஜ.வைத்தான் ஆதரித்தோம்.அந்த கூட்டணியில் தான் தி.மு.க., இணைந்தது. நாங்களாக போய் தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களிலும் ம.தி.மு.க.,வை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கரிவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்தின.எங்களுக்கு என தனி ஓட்டு வங்கி உள்ளது. இனி எங்கள் ஓட்டு வங்கியை அந்த இரு கட்சிகளும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு என தனி பாதை வகுத்து, அதில் பயணம் செய்வோம். தனித்தே செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்.இரு கட்சிகளையும் தோளில் தூக்கிச் செல்பவர்களாக இனி ம.தி.மு.க.,வினர் இருக்க மாட்டார்கள். எங்கள் நிலைக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. அது எந்த அளவு இருக்கிறது என்பதை தேர்தல் முடிந்த பின்னர் நிரூபிப்போம்.இவ்வாறு ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

No comments: