Search This Blog

Sunday, April 17, 2011

தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

சென்னை மாவட்டத்தில், 14 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பில், புரசைவாக்கம், பூங்கா நகர் தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, திரு.வி.க., நகர், கொளத்தூர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு தொகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்டு, 16 சட்டசபை தொகுதிகளாக உயர்த்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 31 லட்சத்து 71 ஆயிரத்து 580. இதில், 11 லட்சத்து 4,146 பேர் ஆண்களும், 10 லட்சத்து 53 ஆயிரத்து 237 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாவட்ட தொகுதிகளில் பதிவாகியுள்ள ஓட்டு சதவீதம் வெற்றி, தோல்வி குறித்த சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
அது குறித்த விவரம்:
ராதாகிருஷ்ணன் நகர்: தி.மு.க., சார்பில் சேகர்பாபு, அ.தி.மு.க., சார்பில் வெற்றிவேல் உட்பட, 31 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 70 ஆயிரத்து 457 ஆண்களும், 70 ஆயிரத்து 810 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஓட்டுப்பதிவு செய்திருப்பதால், சுயஉதவிக் குழுக்களின் ஆதரவு தி.மு.க.,விற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த தேர்தலில், 18 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேகர்பாபு, கட்சி மாறி தி.மு.க., சார்பில் போட்டியிடுவதால், அந்த ஓட்டுகள் இவருக்கு கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஓட்டுப்பதிவு அன்று, ஒரு மூதாட்டி சேகர்பாபுவை சந்தித்து, "பாபு உனக்கு ஓட்டுப் போட்டுட்டேன் பா, இரட்டை இலை சின்னத்தில் தான் பா போட்டேன்' என்று கூறியதை கேட்டு, சேகர்பாபு உட்பட சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற வாக்காளர்களின் ஓட்டுகள் சேகர்பாபுவுக்கு பலவீனமாக உள்ளது.
பெரம்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், சவுந்தரராஜன், தி.மு.க., சார்பில் தனபாலன் உட்பட, 20 பேர் போட்டியிட்டனர். கம்யூனிஸ்ட் வசம் உள்ள தொகுதி, கடந்த தேர்தலில் மகேந்திரன் 3,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, கம்யூனிஸ்ட் அணி மாறி, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறது.
பெருந்தலைவர் மக்கள் கட்சியை சேர்ந்த தனபாலன், தி.மு.க., ஆதரவில் போட்டியிட்டார். தனபாலனுக்கு, நாடார் சமூகத்தினர் ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. 84 ஆயிரத்து 570 ஆண்களும், 77 ஆயிரத்து 355 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.
கொளத்தூர்: தொகுதி சீரமைப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி தி.மு.க., சார்பில் ஸ்டாலின், அ.தி.மு.க., சார்பில் சைதை துரைசாமி, பகுஜன் சமாஜ் சார்பில் ஆம்ஸ்ட்ராங் உட்பட, 27 பேர் போட்டியிட்டுள்ளனர். 72 ஆயிரத்து 314 ஆண்களும், 69 ஆயிரத்து 592 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் இருவரும் சமபலம் உள்ளவர்கள் என்பதால் போட்டி அதிகளவில் இருந்தது. தி.மு.க., சார்பில் வீடு வீடாக அதிகளவு பணம் வினியோகம் செய்யப்பட்டதாக தொகுதி மக்கள் சொல்கின்றனர். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்கள் மூலம், தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற வாய்ப்புள்ளது.
சைதை துரைசாமி சளைக்காமல் தெரு தெருவாக ஓட்டு சேகரித்தோடு, மனிதநேய அமைப்பு மாணவர்களின் உதவியுடன் ஓட்டு சேகரித்தார். யாருக்கு வெற்றி என்றாலும், சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தான் இருக்கும்.
வில்லிவாக்கம்: தி.மு.க., சார்பில் கட்சி பொதுச் செயலர் அன்பழகன், அ.தி.மு.க., சார்பில் பிரபாகரன் உட்பட 13 பேர் போட்டியிட்டனர். 2006ம் தேர்தலில், இந்த தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. தொகுதி சீரமைப்பில், சென்னை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.
மொத்த வாக்காளர்கள், 1 லட்சத்து 93 ஆயிரத்து 176. இதில், 66 ஆயிரத்து 896 ஆண்களும், 63 ஆயிரத்து 719 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க.,வினர் அரசின் சாதனைகளை கூறி, ஓட்டு சேகரித்தாலும், பிரபாகரன் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். எல்லாரிடத்திலும் எளிமையாக பழக கூடியவர் என்ற பெரிய பலத்தோடு, அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையோடு உள்ளனர்.
திரு.வி.க., நகர்: தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி. ஏற்கனவே இருந்த புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் தொகுதிகளில், சில வார்டுகளை இணைத்து உருவாக்கப்பட்ட தொகுதி. மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 81 ஆயிரத்து 180, இதில், 62 ஆயிரத்து 179 ஆண்களும், 61 ஆயிரத்து 591 பெண்களும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க., சார்பில், போட்டியிடும் நீலகண்டன் தொகுதியில் அறிமுகமானவர்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் டாக்டர் நடேசன், வெளியூரை சேர்ந்தவர் என்பதாலும், வேட்பாளரை தேர்வு செய்ததில், குளறுபடி ஏற்பட்டதாலும், காங்கிரசார் தேர்தல் பணி சரிவர செய்யவில்லை. இதனால், நம்பிக்கையுடன் நீலகண்டன் வலம் வருகிறார்.

No comments: