ஒரு கப் காபி கூட என் சொந்த பணத்தை செலவு செய்து தான் குடிக்கிறேன் என, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கூறினார். மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில், இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
தேர்தலில் கறுப்புப் பணத்தை திரிணமுல் கட்சித் தலைவர் மம்தா செலவு செய்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கவுதம் தேவ், குறை கூறியிருந்தார்.
இது குறித்து மம்தா பானர்ஜி குறிப்பிடுகையில், "தேர்தலில் நான் கறுப்புப் பணத்தை செலவு செய்வதாகக் கூறிய கவுதம் தேவ் மீது அவதூறு வழக்கு தொடருவேன். ஹெலிகாப்டரை பயன்படுத்தும் படி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதால் தான், ஹெலிகாப்டரை பயன்படுத்தி பல இடங்களில் விரைவில் பிரசாரம் செய்து வருகிறேன். ஒரு கப் காபி குடிப்பதாக இருந்தாலும் என்னுடைய மணிபர்சில் உள்ள காசைத் தான் செலவு செய்கிறேன்' என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் கவுதம் தேவ் குறிப்பிடுகையில், "மம்தா என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஏனென்றால் மம்தா மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஏராளமான ஆதாரங்களை வைத்திருக்கிறேன். திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவும், முகுல்ராயும் பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர். தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 226 வேட்பாளர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் மம்தா. 33 கோடியே 90 லட்ச ரூபாய் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு பணம் எங்கே இருந்து வந்தது. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் நாங்கள் புகார் தெரிவிப்போம்' என்றார்.
மந்திரி மகன் கைது: மேற்கு வங்க இடதுசாரி கூட்டணி தலைவர் பிமன் போஸ் குறிப்பிடுகையில், "மத்திய அமைச்சர் முகுல் ராயின் மகன் சுப்ராங்சு ராய், பிஜப்பூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிட்ட தேர்தல் அதிகாரிகளை சுப்ராங்சு தாக்கியுள்ளார்.
இதன் மூலம், திரிணமுல் காங்கிரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை, என்பது தெளிவாகிறது. தேர்தல் அதிகாரிகளை தாக்கிய சுப்ராங்சுவை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்றார்.
சுப்ராங்சுவை கைது செய்யத் தவறிய உள்ளூர் போலீஸ் அதிகாரியை, தேர்தல் கமிஷன் சஸ்பெண்ட் செய்திருந்தது. தலைமறைவாக இருந்த சுப்ராங்சுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மே.வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிடுகையில், "மேற்குவங்கத்தில் கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு, தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை அதிக அளவில் உருவாக்க தவறி விட்டது' என்றார்.
No comments:
Post a Comment