Search This Blog

Sunday, April 17, 2011

கேரள கவுரியம்மாவும்... பிரம்படியும்...

கம்யூனிசம் கொள்கையில் தளராத நம்பிக்கை கொண்டிருக்கும், 92 வயது கேரளா கவுரியம்மா, கேரளாவில் பட்டி, தொட்டியெல்லாம் தெரிந்தவர். முதன் முதலில் போட்டியிட்ட செர்தலாவில், இன்றும் மக்களை பெயர் வைத்து கூப்பிடும் அளவுக்கு பரிட்சயமானவர். குறைந்தது மூன்று தலைமுறைகளுக்கு இவரை தெரிந்திருக்கும்.
தொடர்ந்து கம்யூனிசம் தொடர்பான புத்தகங்களை படித்து வந்த இவருக்கு, அதன் கொள்கைகள் பிடித்து விட்டது. தீவிர கம்யூனிச தலைவராக உருவெடுத்தார். 1957ல், உலகிலேயே, முதன் முதலாக கேரள மக்களால் தேர்வு செய்யப்பட்ட, ஒரு கம்யூனிச அரசில், வருமானத் துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
54 ஆண்டுகள் கழித்தும், இன்றும் 92 வயதில் அதே தீவிர கம்யூனிச கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார். 1948ல் இருந்து, இதுவரை (நடப்பு தேர்தலை சேர்க்காமல்) நடந்த 16 தேர்தல்களில், 1948, 1977, 2006 ஆகிய மூன்று தேர்தல் களில் மட்டுமே தோல்வியடைந்தார்.
கடந்த, 1994ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி, ஜனாதிபத்திய சம்ரக்ஷனா சமிதி என்ற பெயரில் கட்சி துவக்கினார். இக்கட்சியின் சார்பில், தற்போது நான்காவது முறையாக, ஆலப்புழாவில் உள்ள செர்தலாவில் போட்டியிட்டார்.
கடந்த 1957, 1967, 1980, 1987 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி பதவியேற்ற போது அமைச்சராக பதவி வகித்தார். 1980ம் ஆண்டுகளில் முதல்வராக முயற்சித்தார். ஆனால், ஈ.கே.நாயனார் முதல்வராக்கப்பட்டார். இவர் முதல்வராக வரவிடாமல் தடுத்தது, தற்போதைய முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் என, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டுள்ளார். இக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கவுரியம்மாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதே காங்கிரஸ் தான், செர்தலா தொகுதியை இவருக்கு விட்டு கொடுக்க சண்டித்தனம் செய்தது.
கடந்த, 1964ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது. இவரது கணவர் டி.வி.தாமஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிக்க, இவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். கட்சி கொள்கை தான் முக்கியம் என்ற முடிவில் கணவரையும் பிரிந்தார்.
"எம்.எல்.ஏ., ஆவதற்கு உடல் பலம் தேவையில்லை. மக்களின் பிரச்னைகளை தெரிந்து, சரி செய்ய நல்ல மூளை இருந்தால் போதும்' என்கிறார் கவுரியம்மா.
ஆரம்ப கட்டத்தில் ஆட்சிக்கு எதிரான புன்னபுரா - வயலூர் புரட்சியின் போது, இவரை போலீசார் கடுமையாக தடிகளால் தாக்கியதாக கூறப்பட்டது. இச்சம்பவம் குறித்து இவர் முன்பு கூறுகையில், "இச்சம்பவத்தின் போது போலீசாரின் பிரம்புகளுக்கு இனப்பெருக்க திறன் இருந்திருந்தால், நான் பிரம்பு குழந்தைகளை பெற்றிருப்பேன்' என, வருத்தத்துடன் கூறியது உண்டு.
அப்போதும் அரசியலை விட்டு நீங்காமல், உறுதியாக இருந்து, இன்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெறும் அளவுக்கு, 17வது முறை போட்டியிட்டு சாதனை படைத்துள்ளார் கவுரியம்மா.

No comments: