தமிழின படுகொலை என்ற களங்கத்துக்கு கருணாநிதி தான் முதற்காரணம் என வரலாறு தூற்றும்' என்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:பாமர மக்களை திசை திருப்பும் வகையில், அரசியல் தலைவர்கள் கபட நாடகம் ஆடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி, இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக்கட்ட போரில், தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசின் முப்படைகளாலும் வீசப்பட்ட கொத்து குண்டுகளுக்கு இரையாயினர்.தமிழக முதல்வர் கருணாநிதி, இப்படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி, காலை உணவுக்கு பிறகு, சென்னை மெரீனா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்தார். அப்போதே, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று, மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்ததாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை; இனப்படுகொலையும் தவிர்க்கப்படவில்லை.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.,வின் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. இலங்கை தமிழர்கள் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. இதை, கருணாநிதி செய்யவில்லை. ஆட்சி போனால் திரும்பப் பெறலாம்; போன உயிர் திரும்ப வராது. ஆனால், முதல்வர் கருணாநிதி தனது அணியை சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, ராஜபக்ஷேவுடன் கை குலுக்க வைக்கிறார். இங்கிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இலங்கை பிரச்னையில் கருணாநிதியின் நிலைப்பாடு என்னவென்பது தமிழக மக்களுக்கு தெரியாமலில்லை. பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் கருணாநிதியின் தந்திரம் இனி எடுபடாது.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment