Search This Blog

Sunday, January 23, 2011

ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவில் எதியூரப்பாவுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள்

கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக 15 வழக்குகளைத் தொடரலாம் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அளித்துள்ள அனுமதிக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த வழக்குகள் விவரம்:

1. பெங்களூர் , கே.ஆர்.புரம், ராச்சனஹள்ளி கிராமத்தில், சர்வே எண் 55-2ல் உள்ள 1 ஏக்கர் 2 குண்டா நிலத்தை 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் டினோட்டிபை செய்துள்ளார் எதியூரப்பா. இதன் மூலம் அவர் அடைந்த லாபம் ரூ. 19.6 கோடி.

2. கே.ஆர்.பாரும், ராச்சனஹள்ளி, சர்வே எண் 56ல் உள்ள 16 குண்டா நிலத்தை 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் டினோட்டிபை செய்துள்ளார். மேலும், இந்த நிலம் பின்னர் முதல்வரின் மகன்கள், மருமகன் ஆகியோருக்கு 75 சதவீத பங்குள் உள்ள தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் முதல்வர் குடும்பம் அடைந்த லாபம் ரூ. 7.4 கோடியாகும்.

3. பெங்களூர், நாகவரா,வயாலிகாவல் பகுதியில், 47,972 சதுர அடி உடைய சாலையை சட்டவிரோதமாக தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்து, கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிடைத்த லாபம் ரூ. 16.26 கோடியாகும்.

4. அரகரே கிராமத்தில், 2 ஏக்கர் 5 குண்டா நிலம் டினோட்டிபை செய்யப்பட்டுள்ளது. இதில் 1 ஏக்கர் 7.5 குண்டா நிலத்தை, முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு விற்றுள்ளனர். இதன் மூலம் கிடைத்த லாபம் ரூ. 25.39 கோடியாகும்.

5. பெங்களூர் வடக்கு தாலுகா, லொட்டேகொள்ளஹள்ளி கிராமத்தில், 9 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். அதேபோல, அதே பகுதியில், 14 குண்டா நிலத்தை, உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் அஷோகாவுக்கு சாதகமாக டினோட்டி செய்துள்ளனர்.

6. அகரா கிராமத்தில், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஏக்கர் 5 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதில் 2 பகுதி நிலம் (16,000 சதுர அடி மற்றும் 5000 ச.அடி), மார்ச் மாதத்தில் எலியான் டெவலப்பர்க் நிறுவனத்திற்கு தலா ரூ. 1.76 கோடி மற்றும் ரூ. 44 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 74.05 கோடியாகும். நிலத்தை வாங்கிய உகேந்தர் என்பவருக்கு ரூ. 14.6 கோடி லாபம். முதல்வர் குடும்ப உறுப்பினர்களுக்கு லாபம் ரூ. 2 கோடியாகும்.

7.ஆனேகல் தாலுகாவில் பெருமளவிலான விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக அறிவித்து, முதல்வர் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் மற்றும் பாலாஜி கிருபா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திற்கும் உதவியுள்ளார் முதல்வர். இதற்காக விதிமுறைகளில் மோசடியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

8. ஷிமோகா மாவட்டத்தில், மாச்சனஹள்ளி-ஹொன்னவிலே தொழிற்பேட்டை பகுதியில், தவளகிரி டெவலப்பர்ஸ், பகத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களுக்காக 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி ரூ. 6 கோடி லாபம் கண்டுள்ளார் முதல்வர். இதுபோக ஹொசதுர்கா தாலுகாவில் 330 ஏக்கர் நிலத்தை மாங்கனீஸ் மற்றும் இரும்புத் தாது சுரங்கங்கள் அமைக்க ஒதுக்கியுள்ளனர்.

9. பிரகாஷ் ஷெட்டி என்பவருக்காக மொத்தம் 1 ஏக்கர் 91 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதன் மூலம் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ. 101.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் குடும்பத்தினருக்கு ரூ. 2.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

10. முதல்வர் குடும்பத்தினரின் பார்ட்னரான பெஸ்டோ இன்பிராஸ்டிரக்சர் பெங்களூர் நிறுவனத்திற்காக 11 ஏக்கர் 25குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதை பி.ஆர்.ஷெட்டி என்பவருக்காக செய்துள்ளனர். அதற்குப் பதிலாக, ஷெட்டி, தனது 2 ஏக்கர் 20 குண்டா நிலத்தை பெஸ்டோவுக்கு கொடுத்துள்ளார். இதை ரூ. 3.75 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அதன் மார்க்கெட் மதிப்பு ரூ. 54.45 கோடியாகும். லாபம், ரூ. 50 கோடி -முதல்வர் குடும்பத்துக்கு.

11. முதல்வரின் குடும்பம் தங்களது தொழில்முறை கூட்டாளிகளான பகத் ஹோம்ஸ், கான்டர் பிசினஸ் சொல்யூஷன்ஸ், எலியான் டெவலப்பர்ஸ் ஆகியவை மூலம் செயலிழந்து போயிருந்த ஹெல்த் ஜோன் அட்வைசர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தின. இந்த நிறுவனத்திற்கு ரூ. 34.41 கோடி மார்க்கெட் மதிப்பு்லள 9 ஏக்கர் நிலத்தை ராச்சனஹள்ளியில் ஒதுக்கியுள்ளனர்.

12. உத்தரஹள்ளி கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை டினோட்டிபை செய்து, பாஜக எம்.எல்.ஏ. ஹேமசந்திர சாகருக்கு கொடுத்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 175 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் குடும்பம் ரூ. 3.35 கோடி லாபத்தைக் கண்டுள்ளது.

13. ஆதர்ஷ் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் குடும்பம் சாதகமாக நடந்து அரசு நிலத்தை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் குடும்பத்திற்கு ரூ. 5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

14. உச்சநீதிமன்றம் , உயர்நீதிமன்றஉத்தரவுகளை மீறி, நாகரபவி கிராமத்தில்,5 ஏக்கர் 13 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதனால் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ. 115 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

15. பெங்களூர் ஆர்.எம்.வி. 2வது ஸ்டேஜில் முதல்வர் மகன் ராகவேந்திராவுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியுள்ளனர். இந்த நிலத்தைத்தான் பின்னர் ராகவேந்திரா சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அரசிடம் திரும்பக் கொடுத்தார்.

இந்தப் புகார்களைப் பட்டியலிட்டுள்ள ஆளுநர் பரத்வாஜ், எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த விதி முறை மீறல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ. 465.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, முதல்வர் குடும்பத்தினர் ரூ. 189.71 கோடி பலன்களை சந்தித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முதல்வர் மீது வழக்கு தொடரலாம் என்றும் வழக்கறிஞர்கள் சிராஜின் பாஷா மற்றும் பலராஜ் ஆகியோருக்கு ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார்.

இருப்பினும் உள்துறை அமைச்சர் அஷோகா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தரவில்லை. எதியூரப்பா மீது மட்டுமே கொடுத்துள்ளார். அஷோகா மீதும் வழக்கு தொடர இரு வக்கீல்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் அந்தக் கோரிக்கை தனியாக பரிசீலிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

No comments: