நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது. இவர் ஊனமுற்ற மீனவர் ஆவார். தனது இயலாமையை சொல்லி உயிர்ப்பிச்சை கேட்டும் அதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல், அவரது கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளது இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல்.
சமீபத்தில்தான் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற 19 வயது மீனவரை இலங்கை ரவுடிக் கும்பல் சுட்டுக் கொலை செய்தது. இந்த சோகம் கூட மறையாத நிலையில், மத்திய அரசு உறுதிமொழி அளித்தும் கூட, மீண்டும் ஒரு தமிழக மீனவரை படு கொலை செய்துள்ளது சிங்களக் கும்பல்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கினர். தாக்குதலில் ராஜேந்திரனும்,செந்திலும் கடலில் குதித்துள்ளனர். ஆனால் மீனவர் ஜெயக்குமார் உடல் ஊனமுற்றவர் என்பதால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை விட்டுவிடும்படி அவர் இலங்கை கடற்படை ரவுடிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கதறியுள்ளார். ஆனாலும் மோசமான காட்டுமிராண்டிக் கும்பலான இலங்கை கடற்படை ரவுடிகள், ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி படகைச் சுற்றிச் சுற்றி இழுத்ததில் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹிட்லருக்குக் கூட இப்படிப்பட்ட கொடூர மனம் இருந்திருக்காது என்று கருதும் அளவுக்கு மிக மிக மோசமான வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர் இலங்கை காவாலிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 மீனவர்களை இலங்கை கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் தமிழக மீனவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கடந்த 12ம் தேதிதான் பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு தந்தி அடித்தார். இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத சுறுசுறுப்புடன் (தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால்) இலங்கை தூதரை அழைத்து விளக்கம் கேட்டு அனுப்பி வைத்தது.
மேலும், தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, நேற்றுதான் கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னொரு இந்தியத் தமிழரை வீழ்த்தியுள்ளது இலங்கைக் கடற்படை கும்பல்.
ஜெயக்குமார் உடலுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமாரின் உடலுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று மீனவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரி மீனவர்கள் கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
ஜெயக்குமார் சார்ந்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலைநிறுத்தத்தில் குதித்தனர்
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்து புஷ்பவனம் கிராம மீனவர்கள் கடலுக்குப் போகாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை வெறிச் செயலால் மீனவர் கிராமங்களில் பரபரப்பும், கொந்தளிப்பும், கொதிப்பும் நிலவுகிறது.
No comments:
Post a Comment