Search This Blog

Sunday, January 9, 2011

சோதனை மேல் சோதனை: போதுமடா சாமி : பா.ம.க.வினர் புலம்பல்

பா.ம.க.,வின் தேர்தல் கால கூட்டணி பார்முலா கட்சிக்கு வளர்ச்சியை, வெற்றி தேடி தந்த நிலை மாறி, சமீபகால கூட்டணி பார்முலா தோல்வியை தழுவுவதால் பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.
வன்னியர் சங்கத்திலிருந்திலிருந்து 1989ல் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க., ) உருவானது. அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் மட்டும் தனித்து போட்டியிட்டு பா.ம.க., தோல்வி அடைந்தது. தொடர்ந்து 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் 147 தொகுதியில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.கடந்த 1996 சட்டசபை தேர்தலிலும் 165 தொகுதியில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., எடப்பாடி, தாரமங்கலம், பென்னாகரம், ஆண்டிமடம் ஆகிய நான்கில் மட்டுமே வென்றது. எனவே, கூட்டணி வைத்தால் மட்டுமே கூடுதல் தொகுதியை கைப்பற்ற முடியும் என்ற நிலைக்கு பா.ம.க., தள்ளப்பட்டது.எனவே, 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் இணைந்து ஐந்து இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., தர்மபுரி, சிதம்பரம், வந்தவாசி, வேலூர் என நான்கு தொகுதியில் வென்றது.இந்த வெற்றிக்கு பின்பு, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை கணித்து, அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பா.ம.க., தேர்தல் களத்தில் இறங்கியது.

இந்த கூட்டணி பார்முலா 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ம.க.,விற்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது.அ.தி.மு.க.,வில் இருந்து விலகி 1999 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,- தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து எட்டு இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., ஏழு தொகுதியில் வெற்றி பெற்றது. மக்கள் ஆதரவு மாறுவதை கணித்த பா.ம.க., பின்பு தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி 2001 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து 27 தொகுதியில் போட்டியிட்டு 21 தொகுதியில் வெற்றி பெற்றது.அடுத்து 2004 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இணைந்து ஆறு தொகுதியில் போட்டியிட்டு, ஆறிலும் பா.ம.க., வெற்றி பெற்றது. தொடர்ந்து 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியுடன் இணைந்து 31 தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க, 18 தொகுதியில் வென்றது.

தொடர்ந்து 15 ஆண்டுகள், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தேர்தலுக்கு முன்பு கூட்டணி தொடர்பாக எடுக்கும் முடிவு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. ஆனால், 2006க்கு பின் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கூட்டணி கணிப்பு தோல்வியில் முடிந்தது தொண்டர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கூறியதாவது:வன்னியர் சங்கத்திலிருந்து அரசியல் கட்சியாக பரிணமித்த பின், தொடர்ச்சியாக தேர்தல் களம் கண்டு வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக கட்சித் தலைமை எடுத்த, முடிவுகள், தேசிய அளவில் கட்சி அந்தஸ்து பெற காரணமாயிற்று. ஆனால், அவை அனைத்தையும் இழந்து தற்போது, பூஜ்யத்தில் இருந்து கணக்கைத் துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2006ல் தி.மு.க., கூட்டணியில் இருந்த நிலையில், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இணைந்து ஏழு தொகுதியில் போட்டியிட்டோம்; அனைத்திலும் தோல்வியைத் தழுவினோம். "திட்டமிட்டு எங்களை தோல்வி அடைய வைத்து விட்டனர்' என வெளிப்படையாக குற்றஞ்சாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்து பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தோம். தொடர்ச்சியாக, இரு தேர்தலிலும் எங்களின் கூட்டணி கணிப்பு தவறாகி விட்டது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியிலேயே பா.ம.க., நீடித்திருந்தால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், தவறாக கணித்து அ.தி.மு.க., பக்கம் ஒதுக்கியதால், டில்லி செல்வாக்கையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாகும். எனவே, எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு, கூட்டணியை கட்சித் தலைமை முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான், இதுவரை கட்சி சந்தித்த சோதனைகளுக்கு முடிவு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: