Search This Blog

Wednesday, January 19, 2011

மத்திய மந்திரி சபை மாற்றத்தில் தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி : மம்தா கட்சிக்கும் வாய்ப்பில்லை

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. மூன்று பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர். மூன்று புதுமுகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி, பெட்ரோலியத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தி.மு.க., மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தொலைத் தொடர்பு அமைச்சராக கபில் சிபல் நீடிப்பார் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், எண்ணிக்கை அளவில் சில சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் நேற்று நிகழ்ந்தது. இந்த மாற்றத்தில், தனிப் பொறுப்புடன் கூடிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரபுல் படேல், கனரக தொழில்கள் துறைக்கான கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளது கூட்டணிக் கட்சிக்கு தரப்பட்ட அங்கீகாரம் ஆகும். கடந்த 1996ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா, தனிப் பொறுப்புடன் கூடிய உருக்குத் துறை இணை அமைச்சராகியுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், மின்துறை இணை அமைச்சராகியுள்ளார். இந்த இருமாநிலங்களிலும் விரைவில் தேர்தல் வருகிறது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அந்தத் துறையை கவனித்து வந்த முரளி தியோரா, கம்பெனிகள் விவகாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெய்பால் ரெட்டி கவனித்து வந்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கமல் நாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் முயற்சியில் முழுவெற்றி பெறாத அவர் பொறுப்பை இனி சி.பி.ஜோஷி கவனிப்பார்.

விவசாயத் துறை அமைச்சராக சரத் பவார் நீடிக்கிறார். அதே நேரத்தில், அவர் கவனித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் சிவில் சப்ளை துறை பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அவர் விரும்பியபடி இலாகாக்கள் குறைக்கப்பட்டன. உள்துறை இணை அமைச்சராக இருந்த அஜய் மக்கான், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பொறுப்பை கவனித்து வந்த எம்.எஸ்.கில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது, காமன்வெல்த் ஊழல் குறித்த புகாருக்கு கிடைத்த பதில் என்று கருதலாம். வெளிநாட்டு இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவிக்கு, கூடுதல் பொறுப்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில் சிபல் நீடிக்கிறார். அதே நேரத்தில், அவரிடம் இருந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை, பவன் குமார் பன்சாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செல்ஜாவிடம் இருந்த சுற்றுலா துறை பறிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையோடு, கலாசாரத் துறையையும் கூடுதலாக கவனிப்பார். ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக, சசி தரூருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, அந்தப் பொறுப்போடு, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பொறுப்பு மற்றும் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதியத் துறையையும் சேர்த்து கவனிப்பார். மின் துறை இணை அமைச்சர் பாரத்சிங் சோலங்கிக்கு ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில் எந்த ஒரு அமைச்சரும் நீக்கப்படவில்லை. சிதம்பரம், பிரணாப், அந்தோணி , கிருஷ்ணா, மம்தா, ஆனந்த் சர்மா ஆகியோரின் இலாகாக்களிலும் மாற்றமும் இல்லை. எல்லா இலாகாக்களிலும் காங்கிரஸ் பிரதிநிதி இருக்கும் வகையில் மாற்றம் அமைந்திருக்கிறது.

புதிதாக பதவியேற்றவர் களுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் மூலம், மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 35 பேர் கேபினட் அமைச்சர்கள், 6 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், மீதமுள்ளவர்கள் இணை அமைச்சர்கள். மேலும், அமைச்சரவை மாற்றத்தில், தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கைவிரிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளைச் சேர்ந்த யாருக்கும் இத்தடவை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மத்தியில் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவுக்கு பதிலாக பாலு அமைச்சராவார் என்ற பேச்சு டில்லியில் இருந்தது. ஆனால் புதிதாக யாருக்கும் பதவி தரப்படவில்லை. தி.மு.க., அமைச்சர்களுக்கும் இலாகா மாற்றம் இல்லை. பழைய பொறுப்பிலேயே தொடருகின்றனர்.

மூன்று புதிய மந்திரிகள் பின்னணி என்ன? விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில், மூன்று புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த வேணுகோபால், பஞ்சாபைச் சேர்ந்த அஸ்வினி குமார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா ஆகியோர் நேற்று புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பஞ்சாப் சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பிரபோத் சந்திராவின் மகன் அஸ்வினி குமார்(58). டில்லியில் பிறந்த இவர், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். சுப்ரீம் கோர்ட் வக்கீலான இவர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந் து உள்ளார். வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த சசி தருர் கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் ராஜினாமா செய்ததால், கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபாலுக்கு(47) அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், பல்கலைக் கழக அளவில் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர். கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆலப்புழாவில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். மூன்று முறை எம்.எல்.ஏ., வாக இருந்துள்ளார். மாநில சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நாயர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியு உஇள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோண்டா தொகுதி எம்.பி.,யான பெனி பிரசாத் வர்மா(69), குர்மி இனத்தின் தலைவராக உள்ளார். ஏற்கனவே இவர் நான்கு முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அவ்வப்போது கட்சி மாறும் இவர், கடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிலிருந்து மீண்டும் காங்கிரசுக்கு தாவினார்.

அடுத்த மாற்றம் எப்போது? ""பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், பெரிய அளவில் மாற்றம் இருக்கும்,'' என, பிரதமர் மன்மோகன் கூறினார். மேலும் கூறியதாவது: தெலுங்கான தனி மாநில கோரிக்கை தொடர்பாக, ஆந்திர அரசியல் கட்சி தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின் அந்தத் தலைவர்கள் கிருஷ்ணா கமிட்டி அறிக்கையை படிப்பர். அதன் பின் மீண்டும் ஆலோசனை நடைபெறும், என்றார்.

No comments: