Search This Blog

Sunday, January 9, 2011

மைக்கை நிமிர்த்தும் எதிர்கட்சிகள்: ஆளூம் கட்சிக்கு நெருக்கடி

முழுக்க, முழுக்க பேச்சாற்றல் கொண்ட குழுவாகவே உருவாகி, அதன் மூலமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து, தொடர்ந்து வெற்றி வாகை சூடிய தி.மு.க., விற்கு, வரும் சட்டசபை தேர்தலில் எதிர்கட்சிகளின் மேடைப் பேச்சு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. எதிர்கட்சி, எதிரணியில் உள்ள பேச்சாளர்கள் ஆளுங்கட்சியை துளைத்தெடுக்கும் வகையில், பிரச்னைகள் வரிசை கட்டி நிற்பதால் தி.மு.க.,விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேடைப்பேச்சில் மிகுந்த வல்லமை பெற்ற அண்ணாதுரை; அவர் வழியிலேயே தனது வசனக் கவிதைகளாலும், சொல் விளையாட்டு மற்றும் சினிமா வசனங்களால் தமிழக மக்களை ஈர்த்து, அதன் பலனை இன்றுவரை பெற்று வருபவர் முதல்வர் கருணாநிதி.கிளைக்கழக கொடியேற்றுவிழாவில், துவங்கி மாவட்ட அளவிலான பொதுக்கூட்ட மேடை வரை ஒலித்த கருணாநிதியின், "கரகரப்பான' கணீர் குரலுக்கு, காரமும், கவர்ச்சியும் அதிகம். எம்.ஜி.ஆர்., காலத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் எதிர்கட்சியாக இருந்தாலும், கருணாநிதியின் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானங்கள் நிரம்பி வழியும்.

தலைமைக்கு ஏற்றவாறு அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் பல மாவட்டங்களில் கட்சியில் முக்கிய பேச்சாளர்கள் உருவாகினர். பேச்சாளர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தி, அவர்களுக்கு திராவிட இயக்கம், தி.மு.க.,வின் வரலாறு குறித்து பாடம் நடத்தி, அவர்களை சிறப்பாக பரிணமிக்கச் செய்வதில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதீத ஆர்வம் உண்டு.தானும் மேடைப் பேச்சாளராக இருந்துதான், இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்று பெருமிதமாக கூறுவதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார். இப்படி, பேச்சிற்கு உள்ள வல்லமையை தி.மு.க., தலைமை இன்றும் உணர்ந்திருக்கிறது.

ஆளுங்கட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய ஸ்பெக்ட்ரம், இலங்கைத் தமிழர் பிரச்னை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் இன்று வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றை மேடைகள் தோறும் முழங்க எதிரணியினரும் தயாராகி வருவது, ஆளுங்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நாஞ்சில்சம்பத், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா. பாண்டியன் என கட்சித் தலைவர்களும், ஸ்டார் பேச்சாளர்களும் ஆளுங்கட்சியை தங்களது பேச்சின் மூலம் இரண்டில் ஒன்று பார்க்க தயாராகி வருகின்றனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து வெளியில் வந்துள்ள சினிமாக்காரர் சீமானும் ஆளுங்கட்சியை தன் பேச்சால் வெளுத்து வருகிறார்.எதிர்க்கட்சியோடு சேர்ந்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா போன்றவர்களும் ஆளுங்கட்சியை விமர்சித்து வருவதால், இவர்களுக்கு தி.மு.க., எப்படி பதிலடி கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விளக்கக் கூட்டங்களை தி.மு.க., தலைமை தற்போது நடத்தி வருகிறது. இந்த கூட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்து தி.மு.க.,வினர் மத்தியில் உள்ளது. இந்த கூட்டங்களுக்கான, "ஐடியா'வை கொடுத்த, தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் திருச்சி சிவாவைத் தவிர, இதர பேச்சாளர்கள் கொடுக்கும் விளக்கம், "இமேஜை' மாற்றும் வகையில் இல்லை.

பொதுவாகவே, ஆளுங்கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது குறைவு. பொதுக்கூட்ட மேடைகளில் சாதனைகளை கேட்பதை விட, குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் கேட்பதையே பொதுமக்கள் விரும்புகின்றனர். உலக நிகழ்வுகள் ஒரு நொடியில், "டிவி' மூலம் வீட்டுக்கு வந்துவிடும் நிலையில், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்ப்பது சிரமமானதாகும்.சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்கட்சிகளின் பேச்சு யுத்தத்தை சமாளிக்க தி.மு.க., தலைமை சுதாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பிரசாரத் தில் முந்துவதற்கு வாய்ப்பாக மாறும் என்று கருதுகின்றனர் தொண்டர்கள்.

No comments: