தமிழக சட்டசபை தேர்தலில், எந்த கழகத்தோடு, "கை' கோர்ப்பது என்பதில், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து வரும் இரு வேறு கருத்துகள் காரணமாக காங்கிரஸ் தலைமை முடிவெடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்நிலையில் கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க., வற்புறுத்துவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், "தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என்ற கோஷத்தை முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதற்கு மாறாக, "தி.மு.க., கூட்டணி வேண்டும்' என்ற கோஷத்தை சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தி.மு.க., கூட்டணியில் தொடரக்கூடாது என மூச்சுக்கு மூச்சு பேசி வரும் இளங்கோவன் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமரிடம் தி.மு.க., தலைவர் வலியுறுத்தியுள்ளார்."கட்சி விவகாரத்தில் நான் தலையிடுவதில்லை. சோனியாவிடம் தெரிவியுங்கள்' என பிரதமர் கூறிவிட்ட நிலையில், டி.ஆர்.பாலு மூலமாக சோனியாவிடம் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து இளங்கோவன் தொடர்ந்து கூறி வரும் கருத்துக்கு, காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்; அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தி.மு.க., தரப்பின் கோரிக்கையாக உள்ளது.இளங்கோவன் மீது மேலிடம் நடவடிக்கை எடுத்தால், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது என்றும், அப்படி நடவடிக்கை எடுக்காமல், மேலிடம் மவுனம் சாதித்தால் கூட்டணி மாறுவது உறுதி என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள உரசல்கள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: அடையாறு பூங்கா திறப்பு விழாவிற்கு பிரதமர் வரவிரும்பவில்லை என்ற காரணத்திற்காக, அவரை வரவேற்க முதல்வர் செல்லாமல், துணை முதல்வரை அனுப்பி வைத்தார். ராஜ்பவனில் பிரதமரை சந்திக்க அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தும், வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். சட்டசபை வளாகத்தில் உள்ள மீன்களுக்கு அவர் உணவளித்து விட்டு பிரதமரைச் சந்திப்பதை தவிர்த்தார். புதிய சட்டசபை கட்டட பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
அந்தக் கட்டடத்தை பிரதமரும், சோனியாவும் திறந்து வைத்தனர். கூட்டணிக்காக அவர்கள் காட்டிய பெருந்தன்மை, தி.மு.க.,விடம் இல்லாமல் போனது?ஒரு கிலோ அரிசி, இலவச ஆம்புலன்ஸ், கான்கிரீட் வீடுகள் திட்டங்களில் மத்திய அரசின் மானியம் இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் இளங்கோவன் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. "கூட்டணியை விட்டு விலகினால் யாருக்கு நஷ்டம்' என முதல்வர் கேட்கிறார். அதற்கு இளங்கோவன் "எங்களுக்கு நஷ்டம் இல்லை. உங்களுக்கு தான் நஷ்டம் வரும்' என பதிலடி தருகிறார்.தி.மு.க., கூட்டணி வேண்டாம்; அ.தி.மு.க., கூட்டணி மலரும், தே.மு.தி.க., வுடன் மூன்றாவது அணி அமைக்கலாம் என தொண்டர்களின் மன உணர்வுகளை தான் இளங்கோவன் பிரதிபலிக்கிறார். அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா?
மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி காலத்தில் இருவரும் தனித்தனியாக கூட்டணி பற்றிய கருத்துகளை மேலிடத்தில் தெரிவிப்பார்கள். ஒரு தலைவருடைய கருத்தை மேலிடம் ஏற்றுக் கொள்ளும் போது, மற்றொரு தலைவர் அதை ஏற்றுக் கொள்வார்.அதேபோல எம்.ஜி.ஆர்., காலத்தில் காங்கிரஸ் கட்சியை காளிமுத்து மூலம் விமர்சனம் செய்வார். காங்கிரஸ் மேலிடம் சரியானதும், காளிமுத்துவும் அடங்கி விடுவார். எனவே கூட்டணி விமர்சனம் என்பதெல்லாம் காங்கிரசுக்கு புதுசு அல்ல.இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும். துணை முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பது தொண்டர்களின் எண்ண ஓட்டம். அதை இளங்கோவன் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.
"இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது' என காலையில் சொல்லிவிட்டு நள்ளிரவில் அதே ஆட்சியை கலைத்து விடுவதும், "கூட்டணி வலுவாக இருக்கிறது' என கூறிவிட்டு கூட்டணியை முறித்த வரலாறுகள் இருக்கின்றன. தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிற தலைமை தற்போது உள்ளது. காங்கிரசைப் பொறுத்தவரை மூச்சு விடும் நேரமாக கருதுகிறது. தி.மு.க., விடம் உள்ள 18 எம்.பி.,க்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.கூட்டணி முடிவில் மதில் மேல் பூனையாகத்தான் இன்று வரை கட்சித் தலைமை நிற்கிறது. இப்போதைக்கு இளங்கோவன் மேல் நடவடிக்கை பாய்ந்தால் தி.மு.க., கூட்டணி நீடிக்கும்; இல்லாவிட்டால் கூட்டணி முறிந்துவிடும் என்ற எண்ணம்தான் பரவலாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment