எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் கடந்த வாரம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மீண்டும், "ஜாக்பாட்' அடித்துள்ளது. எம்.பி.,க்களுக்கான மாதாந்திர அலவன்ஸ்களை 10 ஆயிரம் ரூபாய் உயர்த்த, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு.
எம்.பி.,க்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். "இந்த சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த அளவுக்கு உயர்த்தினால், மக்களிடையே பெரும் அதிருப்தி உருவாகும் என்பதால், தற்போது வாங்குவதை மூன்று மடங்கு அதிகமாக உயர்த்தி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அத்துடன், தொகுதி மற்றும் அலுவலக அலவன்ஸ்கள் மாதம் தலா 20 ஆயிரம் ரூபாய் என்பது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருந்தாலும், "இந்த சம்பள உயர்வு போதாது, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்தபடி, 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்' என வலியுறுத்தி, கடந்த வாரம் ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், எம்.பி.,க்களின் தொகுதி அலவன்ஸ் மற்றும் அலுவலக அலவன்ஸ்களை மாதம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம், அதாவது இரண்டும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வகை செய்யும் முன்மொழிவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இதற்கு அமைச்சரவையும் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையுண்டு. இதனால், எம்.பி.,க்கள் இனி மாதம் ஒன்றுக்கு தொகுதி அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் அலவன்சாக பெறுவர். சம்பளம் 50 ஆயிரம் ரூபாயையும் சேர்த்தால், மாதம் ஒன்றுக்கு 1.40 லட்சம் ரூபாய் பெறுவர். இதுதவிர, வேறு பல சலுகைகளும் உண்டு.
கல்வி தீர்ப்பாயம்: இது மட்டுமின்றி, உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகராறுகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கல்வித் தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, "கல்வி தீர்ப்பாயங்கள் மசோதா-2010'க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அளவில் அமைக்கப்படும் தீர்ப்பாயங்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான விவகாரங்களை கையாளும். தேசிய அளவில் அமைக்கப்படும் தீர்ப்பாயம், உயர் கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும்.இந்த மாநில அல்லது தேசிய கல்வித் தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தாத நபர்களுக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment