Search This Blog

Wednesday, August 25, 2010

நம்மை ஒதுக்கிவைத்த காலம் முடிந்தது : பிரதமர்

அணுசக்தி என்பது நீடித்து பலன் தரும் ஒன்று. அதை நாம் புறக்கணிக்க முடியாது. அணுஉலை விபத்து நஷ்ட ஈடு  மசோதா நிறைவேறுவதன் மூலம், அணுசக்தித் துறையில் நாம் ஒதுக்கி வைக்கப்பட்டது முடிவுக்கு வரும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அத்துடன், அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

"அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா 2010' நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:இந்த மசோதா தயாரிக்கப்பட்டது மற்றும் அதை அவசரமாக பார்லிமென்டில் நிறைவேற்ற முற்படுவது போன்றவற்றை பார்க்கும் போது, அமெரிக்கா சொல்கிறபடி, மத்திய அரசு செயல்படுவது போல தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் பெரும்பான்மை இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு முன்னதாக மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தென்கொரியா அல்ல இந்தியா. அவர்களின் பாணியை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. எங்கள் கட்சி சொல்லும் திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், நாங்கள் மசோதாவை ஆதரிப்போம்.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

மணீஷ்திவாரி - காங்கிரஸ்: அணுசக்தி விஷயத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங். அவர் மேற்கொண்ட நடவடிக்கையை தான், பிரதமரான பின், மன்மோகன் சிங் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.அமெரிக்காவுடன் மட்டுமின்றி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளுடனும் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எரிசக்தி அவசியம் என்பதால், இந்த மசோதாவும் அவசியமே. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், அணுசக்தி அவசியமான ஒன்று.

சைலேந்திர குமார் - சமாஜ்வாடி: அணுசக்தி விவகாரத்தில் சப்ளையர் மற்றும் ஆபரேட்டர் என, இரு தரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதால், இந்த மசோதா மிகவும் முக்கியமானது.

கோரக் பிரசாத் ஜெய்ஸ்வால்  - பகுஜன் சமாஜ்: இந்த புதிய மசோதாவுக்கு அவசியமே இல்லை. புதுப்புது மசோதாக்களை கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.

வாசுதேவ் ஆச்சார்யா - மார்க்சிஸ்ட்: இது அமெரிக்க நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.   அமெரிக்க வர்த்தக நலனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கிறது.

டி.கே.எஸ்.இளங்கோவன் - தி.மு.க: ஒரு விபத்து நடந்ததை வைத்து, அத்தொழிலையே ஏற்க முடியாது என்று கூறமுடியாது. எதிர்காலத்தில் கார்கள் கூட அணு மின்சக்தியில்  ஓடும்.

இந்த விவாதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், அணுசக்தித் துறையில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது முடிவுக்கு வரும். அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டு இந்த மசோதா தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு. அணுசக்தி என்பது நீடித்து பலன் தரக்கூடிய, ஒரு நல்ல வாய்ப்பு. அதை நாம் புறக்கணிக்க முடியாது. இதன்மூலம் உலக நாடுகளுடன் அணுப் பொருட்கள் வர்த்தகத்தில் இந்தியா ஈடுபட முடியும்.அமெரிக்கர்களின் நலனை மேம்படுத்தவும், அமெரிக்க கம்பெனிகளை மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள், 1992ம் ஆண்டு முதல் கூறப்பட்டு வருகின்றன.இதற்கெல்லாம் வரலாறு பதில் சொல்லும்.

 1991ம் ஆண்டில் நிதி அமைச்சராக பணியாற்றிய போது, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தேன். அது இந்தியா மறுமலர்ச்சி அடைய வழி வகுத்தது. அதுபோல அணுசக்தியும் நீண்ட காலத்திற்கு பலன் தரும்.தொழில்நுட்பம் என்பது நிலையாக இருக்காது. அது வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது.அணுமின் நிலையங்களை பாதுகாக்க தேவையான ஒவ்வொன்றையும் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. அணுசக்தி பயன்பாடு என்பது முக்கியமான பிரச்னை. அது ஒதுக்கித்தள்ள முடியாது. அதனால், அணுசக்தியை பயன்படுத்துவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும். உறுப்பினர்களின் கவலைகளை நான் நன்கறிவேன்.  இந்தியாவில் 40 அணு உலைகள் உள்ளன. அவற்றில் ஒரு விபத்து கூட நடந்ததில்லை. இது விஞ்ஞானிகளின் திறமைக்கு ஒரு சான்று.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.இதையடுத்து, அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.மேலும், வரும் 31ம் தேதி வரை  லோக்சபா கூட்டத் தொடர்  நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

No comments: