Search This Blog

Friday, August 27, 2010

சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ் தடாலடி அறிவிப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஓமலூர், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பாமக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

கடந்த 42 ஆண்டுகாலமாக தமிழகத்தை சினிமா கலைஞர்கள் மட்டும் ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இது போன்ற அவலநிலை இல்லை. இந்த நிலையை மாற்ற இளைஞர்களராகிய உங்களால் தான் முடியும்.

இன்றைய இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் [^], வகுப்புகளுக்கே குடித்து விட்டு ஆசிரியர்களிடம் தகராறு செய்கிறார்கள் என்ற செய்தி கேட்டு என் மனம் தீயிலிட்ட புண் போல எரிகிறது.

இளைஞர்கள் குடித்துவிட்டு எதிர்காலத்தை வீணாக்குவதுடன், அவனது குடும்பத்தையும் அனாதையாக விட்டு விடுகிறான். எனவே இளைஞர்களே உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் குடிக்க வேண்டாம்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பலமுறை முதல்வரை வலியுறுத்தியும் எடுக்க மறுக்கிறார். அதற்கு ரூ. 4,000 கோடி செலவாகும் என்கிறார். ரூ. 40,000 கோடி செலவானாலும் சாதிவாரி கணக்கு எடுத்தே தீர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 6.5 கோடி மக்களில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். எனவே எனது மக்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு இலவச பொருட்களை கொடுப்பதை தவிர்த்து, அனைத்து தரப்பு மக்களுக்கும், இலவசமாக சமச்சீர் கல்வியை கொடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும். அதை வைத்து அவர்கள் உழைத்து பிழைத்து கொள்வார்கள்.

டாஸ்மாக் கடைகளை உடனே மூட முடியாவிட்டாலும், கொஞ்சம், கொஞ்சமாக மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்.

எனது தலைமுறைக்குப் பிறகு பாமகவை காப்பாற்றும் பொறுப்பு இளைஞர்கள், இளம் பெண்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே பாமகவை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

108 ஆம்புலன்ஸ், சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை [^], சேலம் மக்களின் 40 ஆண்டு கால கனவாக இருந்த ரயில்வே கோட்டம் ஆகிய திட்டங்களை எனது வற்புறுத்தலின் பேரில் அப்போதைய மத்திய பாமக அமைச்சர்கள் கொண்டு வந்தார்கள்.
ஆனால், இப்போது அதை யார், யாரோ, நான் கொண்டு வந்தேன் என்று கூறுகிறார்கள். இந்த திட்டங்களை யார் கொண்டு வந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம். அதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் கிராமம், கிராமமாக சென்று புதிய கிளைகளை ஏற்படுத்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எனவே கூட்டணியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

அனைத்து கட்சிகளிலும் உள்ள நம் இன மக்கள் நமக்கு வாக்களித்தாலே இந்த 100 தொகுதியிலும் நாம் வெற்றி வெற்றி பெற்று ஆட்சி மகுடத்தில் அமர்ந்துவிட முடியும்.

இன்றைய சூழ்நிலையில் நம் இன மக்கள், மனுவை கையில் ஏந்திக் கொண்டு அய்யா, எங்களுக்கு ஏதாவது செய்யுங்கள், என்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கூனி, குறுகி முறையிட வேண்டியுள்ளது.

நாமும் மாவட்ட ஆட்சியராகவோ, மாவட்ட எஸ்.பியாகவோ, உயர் அதிகாரிகளாக படித்து முன்னேறினால் மட்டுமே நம் இன மக்களையும், அடித்தட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

எனவே நம் இன இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொரு கிராமம், கிராமமாகச் சென்று மற்ற கட்சியில் உள்ளவர்களை நம் கட்சிக்கு அழைத்து வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

சினிமாவை ரசியுங்கள். ஆனால்,...:

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி [^] பேசுகையி்ல்,
இன்றைய இளைஞர்கள் சினிமாவை பார்த்து அதில் வருவது போலவே தன்னையும் பாவித்துக் கொண்டு மது, சிகரெட் போன்ற பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.

சினிமா கலைஞர்களுக்கு கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்து இளைய தலைமுறையினர் தாங்கள் எதிர்நோக்கியுள்ள கல்விப் பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உழைக்க முன்வர வேண்டும்.

சினிமாவை ரசியுங்கள். ஆனால், அதை அத்தோடு விட்டு விடுங்கள் என்றார்.

No comments: