2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டி இல்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி மண்டலம் ஐ.ஓ.பி. சார்பில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கி நிர்வாகிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம் நடந்தது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் ப.சிதம்பரம் 643 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது,
மாணவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால் 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
எனது அரசியல் வாழ்க்கையில் பெருமகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம் ஆகும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.
கல்விக் கடனுக்கான வட்டி விவரம் பற்றி நிதித் துறையினர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளனர். கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டியே கிடையாது.
மாணவர்கள் எதிலும் முந்திக் கொள்ள வேண்டும். தற்போது வாய்ப்புகளுக்கு குறைவில்லை. வங்கித் துறையில் மட்டும் 1 லட்சம் பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணியைப் பெற வேண்டும் என்றார்.
இந்த விழாவில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் தலைவர் எஸ்.ஏ. பட் தொடக்க உரையாற்றினார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் எம். ராமதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தியன் வங்கியின் வட்டாரத் தலைவர் கதிரேசன் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment