வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி தொகுதிக்கு 2 சட்டசபைத் தொகுதிகள் வீதம் மொத்தம் 78 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம் .
தமிழக காங்கரஸ் கட்சியிலிருந்து திமுகவுக்கு எதிராக ஈவிகேஎஸ் இளங்கோவனும், கார்த்தி சிதம்பரமும் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களில் இளங்கோவன் பட்டவர்த்தனமாக திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் விமர்சிக்கிறார். கார்த்தி சிதம்பரமும் தனது பலத்திற்கேற்ப திமுகவை விமர்சித்து வருகிறார்.
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் அல்லது கார்த்தி சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு என நான்கு பெரிய கோஷ்டிகளும், கணக்கிலடங்காத குட்டி கோஷ்டிகளும் உள்ளன.
இவர்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்சினை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், தற்போது வாசன் கோஷ்டிக்கு எதிராக இளங்கோவன் கோஷ்டியும், சிதம்பரம் கோஷ்டியும் மறைமுகமாக கை கோர்த்து செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவே இளங்கோவனும், கார்த்தியும் மாறி மாறி திமுகவை சாடி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 78 சீட்கள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் கவனிக்கப்படாத கோரிக்கைகளைத்தான் நான் எதிரொலித்து வருகிறேன். நான் சொல்லும் அனைத்துமே கடைக்கோடியில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் குரல்தான்.
தமிழகத்தில் மொத்தம் 39 எம்.பி தொகுதிகள் உள்ளன. இதில் 15 தொகுதிகளில் ஒருவர் கூட காங்கிரஸ் எம்.பி இல்லை. சென்னையில் உள்ள 3 எம்.பி. தொகுதிகளில் ஒருவர் கூட காங்கிரஸ்காரர் இல்லை.
வருகிற தேர்தலில் ஒரு எம்.பி தொகுதிக்கு 2 சட்டசபைத் தொகுதிகள் வீதம் குறைந்தது 78 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
இது எனது யோசனை. இதே போலத்தான் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைக்கிறார். இதுகுறித்துப் பரிசீலிக்க வேண்டியது மேலிடம்தான் என்றார் கார்த்தி சிதம்பரம்.
No comments:
Post a Comment