தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை. முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் இது பற்றி பேசத் தகுதி இல்லை என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக தொடர் போராட்டங்கள் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸைப் பாராட்டி, அக்கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை பாராட்டுக் கூட்டம் என்று கூறுவது சரியல்ல. தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கும் கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.
பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்.
எனவே, தமிழக அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும் இந்தக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியாக வேண்டும்.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை கூறியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு தொடரலாம் என்றும், அடுத்த ஆண்டுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வளவு இடஒதுக்கீடு தேவை என்பதை தீர்மானிக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஒருவேளை பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை 85 சதவீதமாக இருக்குமானால், அந்த அளவுக்கு இடஒதுக்கீட்டை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு.
நாடு சுதந்திரம் பெற்ற பின், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. தீர்ப்பு வந்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யாதது ஏன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இப்போது மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பல மாநிலங்களுக்கு சென்று, ஆதரவை திரட்டி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது பா.ம.க.தான். தமிழகத்தில் எந்த கட்சியாவது இதற்காக குரல் கொடுத்தது உண்டா?
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து மாநில எம்.பி.க்களிடமும் பா.ம.க. கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியது. 174 எம்.பி.க்களின் கையழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சென்று அப்போதைய உள்துறை அமைச்சரிடம் அளித்தார் பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி. அந்த மனுவில் பா.ம.க.வைத் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து போட மறுத்து விட்டனர்.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு ஒரே தொகுப்பாகத்தான் வழங்கப்பட்டு வந்தது. வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலி கொடுத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
இப்போது தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதும் பா.ம.க. மட்டுமே. இவ்வாறு தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநில அரசுக்கு எதிராக பா.ம.க. பெரும் போராட்டத்தில் ஈடுபடும். இதற்காக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்கு தொடர்ந்ததைப் போல என் மீது வழக்கு தொடர்ந்தாலும், அதைச் சந்திக்கத் தயார் என்றார் ராமதாஸ்.
No comments:
Post a Comment