அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டையும், அமைச்சர் பதவியையும் வாங்கித் தந்ததே நான்தான். ஆனால் பழசை மறந்து விட்டார் அன்புமணி, மலிவான அரசியலை நடத்துகிறார் என்று பாய்ந்துள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில்,
சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார் அன்புமணி. அது பா.ம.க கொண்டு வந்தது அல்ல. 2004 ல் ஆ.ராசா மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது எயிம்ஸ் போல இந்தியாவில் 5 இடத்தில் மருத்துவமனை கொண்டு வருவதற்கு முடிவெடுத்தார்.
அதில் திருச்சியும் ஒன்று. அது காபினெட்டில் முடிவாகி பார்லிமென்ட்டிலும் பேசி முடிவான பின்பு தான் சுகாதாரதுறைக்கு அன்புமணி அமைச்சரானார். அப்போது அவரிடம் ஏப்பா திருச்சியில் உள்ளத சேலத்துக்கு கொண்டு வந்தால் சிறப்பா இருக்குமே என்று சொன்னேன். சரிங்க அங்கிள் என்றார்.
இப்போ அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னை அப்போது அங்கிள் என்றுதான் கூபிடுவார். அவர் திருச்சியில் உள்ளதை மாற்றும்படி சொல்லாமல் சேலத்திற்கு என்று தனியாக திட்டமிட்டார். இதற்கு பிரதமரும் ஒப்புதல் கொடுத்தார்.
பின்பு ராசா 'ஏற்கனவே திருச்சியில் அப்ரூவல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பிரதமருக்கு முறையாக சொல்லாமல் அன்புமணி புதிய ஒன்றுக்கு அனுமதி வாங்கியுள்ளார் என புகார் கொடுத்தார். அப்பொழுது அமெரிக்கா போயிருந்த அன்புமணி பதறிப்போனார். உடனே அவர், அங்கிள், ராசா பிரதமரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு என்று புலம்ப, அதன்பின் நான் ராசாவிடம் பேசினேன். பின்பு தலைவரிடமும் பேசி ராசாவை புகாரை வாபஸ் பண்ண வைத்தோம்.
அதன்பின் தான் திருச்சிக்கு போக இருந்த மருத்துவமனை சேலத்திற்கு வந்தது.
தலைவர், உனக்கு வேண்டுமானால் மாநில நிதியில் தனியா அதே இடத்தில் மருத்துவமனை கட்டிக்கொள்ள வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி தான் ராசாவை சம்மதிக்க வைத்தார்.
நிலைமை இப்படி இருக்க, பா.ம.க. உரிமை கொண்டாடுவதில் எந்த நியாமுமில்லை. சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சேலம் வருவதற்கு துரும்பு கூட பா.ம.கவிற்கு சம்மந்தமில்லை.
ஆனால், தான் தான் கொண்டு வந்தேன் என்று சீப் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் அன்புமணி. இன்னும் சொல்லப் போனால் அன்புமணி மந்திரி ஆகவே நான் தான் காரணம். நான்தான் ராஜ்ய சபா சீட் வாங்கி தந்தேன்.
மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதுன்னு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கிளம்ப இருந்தார். அப்போது தலைவர் கலைஞர் முன்னாடி வந்து நின்றார். தலைவர் தான், பொறுமை காக்க சொன்னார். பின் நாங்கள் எல்லாம் பேசித்தான் மத்திய அரசு அத்துறையை அன்புமணிக்கு தந்தது.
பழசை மறக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.3 கோடி மாநில அரசு தந்தது. அது இல்லாமல் நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை கொடுத்திருக்கிறோம். இதன் மதிப்பு 229 கோடி ஆகும். அதே போல் மற்ற இடங்களை விட இங்குதான் முதலில் கட்டி முடித்து திறக்கப்பட உள்ளனர். இதை என்ன சொல்வார்? என்றார் வீரபாண்டியார்.
No comments:
Post a Comment