Search This Blog

Friday, August 13, 2010

ஜாதிவாரி சென்ஸஸ்: குலை நடுங்கிப் போயுள்ள சமூகநீதி எதிர்ப்பு சக்திகள்-வீரமணி

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது நியாயமானதே என்பது உலகுக்கு புலப்பட்டுவிடும் என்பதால் தான் சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் குலை நடுங்கிப் போய், குதறிப் பாய முயல்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அளிக்கப்படுவதற்கு 9வது அட்டவணை பாதுகாப்புடன் உள்ள சட்டத்தை எதிர்த்து, சென்னையில் உள்ள பார்ப்பனர்- முன்னேறிய ஜாதியினரின் அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது 1994ம் ஆண்டுமுதல்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ‘ஸ்டே’ என்ற தடையாணை எதுவும் தராமல், இச்சட்டம் நீடிக்கும், ஆனால் முன்பு 50 விழுக்காடு திறந்த போட்டியில் இருந்தால் எவ்வளவு இடம் அவர்களுக்குக் கிடைக்குமோ அதற்கேற்ப கூடுதலான இடங்களை வழங்க வேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இதுபோன்ற ஓர் ஆணையைப் பெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை கூட, கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை மட்டும் பொருந்தக் கூடியதாக மட்டுமே இருந்தது; வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அது வழமைபோல் 69 சதவிகிதமாக நீடித்து வந்தது!.

கடந்த 3 வாரங்களுக்கு முன் தலைமை நீதிபதி மற்றும் இருவர் அடங்கிய பெஞ்ச் இச்சட்டம் அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் ஆய்வின் பின் இதற்குரிய சதவிகித அளவு பற்றிய அவ்வாணையத்தின் பரிந்துரைக்கேற்ப முடிவு செய்யலாம் என்றெல்லாம் திட்டவட்டமான ஓர் ஆணையை இடைக்கால ஆணையாக தந்துள்ளது மிகவும் சரியான சமூக நீதியை ஒட்டிய ஆணையாகும்.

இதுகண்டு வழக்குப் போட்ட அமைப்பும், பார்ப்பன- முன்னேறிய ஜாதியினரும் ‘ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதித்து’ தங்களது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.

இது போதாது என்று இந்த ஆணையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள்.

சமூகநீதி ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டிவிடக் கூடாது என்பதை எவ்வளவு வெறியுடன் பார்ப்பனரும், அவர்தம் தாசானுதாசர்களாக உள்ள சில பார்ப்பனரல்லாத முன்னேறிய ஜாதியினரும் நடந்து கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர்களது நடவடிக்கை அமைந்துள்ளது அல்லவா?.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஓர் இடைக்கால ஆணை.

இந்திரா சகானி- மண்டல் ஆணைய வழக்கில் 9 நீதிபதிகள் தந்த தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது பொதுவானது என்றாலும், அதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்; மேலும் கூடுதலான இட ஒதுக்கீடு தேவை என்றால், அதற்குரிய போதிய நியாயங்கள் வாதங்கள் நிலைமைகள் இருந்தால் தரலாம் என்று கூறப்பட்டிருப்பதாலும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ்
மக்களின் தொகை ஏறத்தாழ 85 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதால், அதனைச் சுட்டிக்காட்டிட, ஓர் ஆதாரபூர்வப் பணியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் செய்ய ஆணையிட்டதோடு, அரசியல் சட்டத்தின் 15(4), (5), 16(4) ஆகிய பிரிவுகளின்படிதான் அந்த இடைக்கால ஆணையை அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியது!.

இதுவே ஏதோ இறுதி தீர்ப்புபோல குலை நடுங்கி, குதறிப் பாய சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் ஏன் முனைய வேண்டும்?.

“ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931க்குப் பிறகு நடைபெறாதபோது நீங்கள் தன்னிச்சையாக உங்கள் விருப்பம்போல 69 சதவிகிதம் கொடுத்தது எப்படி சரி என்றுதானே இதே விஜயன்கள் இதற்கு முன்பு பலமுறை கேட்டனர்?.

இப்போது உண்மை உலகறியச் செய்யும் வகையில் புள்ளி விவரங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது நியாயங்கள்தானே என்று எவருக்கும் புலப்படுவது உறுதியாகிவிடும் என்ற அச்சம்தானே இவர்களை இப்படி அலறி அலறி ஓடச் செய்கிறது!.

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி நம் நினைவுக்கு வருகிறது.“எனக்குப் பைத்தியம் தீர்ந்துவிட்டது; அந்த உலக்கையைக் கொண்டு வா நான் அதைக் கோவணமாகக் கட்டிக் கொள்ளுகிறேன்! என்றானாம் ஒரு “பிரகளிபதி!’’ அதுபோன்ற இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடுகிறார்கள் போலும்!.

நாடும் நல்லவர்களும், இவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ஏடுகளும், ஊடகங்களும் இனியாவது வர்களைப் புரிந்து கொள்ளுவார்களா?

சமூக நீதிக் கொடியை தமிழ்நாட்டில் இறக்கிவிட எவராலும் முடியாது. அது செந்நீராலும், கண்ணீராலும், வியர்வையாலும் ஏற்றப்பட்ட (சமூகநீதி) கொடியாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.

No comments: