பிரதமர் பதவியில் 2273 நாட்களை முடித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வைத்திருந்த சாதனையை தாண்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர்கள் வரிசையில் தற்போது நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு 3வது இடத்தைப் பிடித்துள்ளார் மன்மோகன் சிங்.
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தபோது அனைவரும் சோனியா காந்திதான் பிரதமராக வருவார் என கருதினர். அப்படித்தான் நிகழ்வுகளும் இருந்தன. ஆனால் வெளிநாட்டுக்காரர் பிரதமராக வருவதா என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அந்தக் கருத்துக்குத் தடையாக அமைந்தது. அந்தப் பிரசாரம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபடாவிட்டாலும் கூட அந்த சிந்தனை மக்கள் மனதில் பதிந்து விட்டதால் தார்மீக ரீதியாக பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்தார் சோனியா காந்தி.
சற்றும் தயக்கம் இல்லாமல் இந்த முடிவை எடுத்த அவர் பிரதமராக மன்மோகன் சிங்கை அறிவித்தபோது அனைவரும் வியப்படைந்தனர். குறிப்பாக காங்கிரஸ்காரர்களுக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. இவரா, இவர் அரசியல்வாதியே கிடையாதே, இவர் எப்படி ஆட்சி நடத்துவார் என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளைப் போலவே காங்கிரஸ்காரர்களுக்கும் இருந்தது.
ஆனால் அந்த எண்ணத்தை அப்படியே மாற்றிப் போட்டார் மன்மோகன் சிங். கட்சியையும், அரசியலையும், சோனியா காந்தி கவனித்துக் கொள்ள, ஆட்சியில் அசத்த ஆரம்பித்தார் மன்மோகன் சிங். அவரது தெளிவான சிந்தனைகள், உறுதியான நடவடிக்கைகளால் தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனக் கணைகளை அப்படியே முறித்துப் போட்டார்.
இந்தியாவிலேயே இதுவரை இப்படி ஒரு பலவீனமான பிரதமர் இருந்ததில்லை என்று அத்வானி மிகக் கடுமையாக விமர்சித்தபோதெல்லாம் அதை மிக சாதுரியாக எதிர்கொண்டு பதிலளித்தார் மன்மோகன். இது கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் படு தோல்விக்கும் வழிவகுத்தது. இதனால் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் அத்வானி.
சோனியா காந்தியைத் தாண்டி செயல்பட முடியாத நிலையில்தான் இன்னும் இருக்கிறார் மன்மோகன் சிங் என்பது உண்மைதான் என்றாலும் அவரது சுயமும் சரியான முறையில், சரியா நேரத்தில் வெளிப்படத் தவறியதில்லை, அவரும் வெளிப்படுத்தத் தவறியதில்லை.
குறிப்பாக அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் காட்டிய தீவிரமும், வேகமும் குறிப்பிடத்தக்கவை. ஆட்சியே போனாலும் பரவாயில்லை, ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என்று அவர் உறுதியுடன் கூறியதும், அந்த உறுதியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி எடுத்த முயற்சிகளும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு திரட்டிய வேகமும் மன்மோகன் சிங் மீதான காங்கிரஸ் கட்சியின் அபிமானத்தை நிரூபிக்க உதவியது.
அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார் மன்மோகன் சிங். இதன் மூலம் இந்திரா காந்திக்குப் பிறகு தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பதவிக்கு வந்த பிரதமர் என்ற பெயரும், பெருமையும் மன்மோகனுக்குக் கிடைத்தது.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தபோதோ மன்மோகன் சிங்குக்குள் இருந்த பொருளாதார நிபுணர் வெளிப்பட்டு இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். இதன் விளைவு, உலகப் பொருளாதார சீர்குலைவில் சிக்காமல், சிதறாமல் தப்பியது இந்தியா. உலகப் பொருளாதார வல்லரசுகளில் ஒன்று, பொருளாதார சீர்குலைவில் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்று கூறினால் அது இந்தியா மட்டுமே.
இந்தியாவுக்கு பாதிப்பு வராது என்று ஆரம்பத்திலிருந்தே மன்மோகன் கூறி வந்தார். சொன்னதோடு நிற்காமல் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரின் உதவியின் மூலம் அப்படி ஒரு நிலை வந்து விடாமல் காக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அவர் முடுக்கி விட்டார். ஒரு அரசியல்வாதி பிரதமராக இருந்திருந்தால் ஒருவேளை இது சாத்தியமாகியிருக்காது என்று தைரியமாக கூறலாம்.
மன்மோகன் சிங் எடுத்த சில கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுவது, 2வது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும் திமுகவுக்கு அவர் போட்ட கிடுக்கிப்பிடிதான். டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோர் அமைச்சரவைக்குத் தேவையில்லை என்று அதிரடியாக கூறினார். அதை விட முக்கியமாக அழகிரிக்கு முக்கிய இலாகா தர முடியாது என்றார். மேலும் அதிர்ச்சியாக கனிமொழியை சேர்ப்பதிலும் சிவப்புக் கொடி காட்டினார். பல முக்கிய இலாகாக்களையும் தர முடியாது என்றும் கூறி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக, அமைச்சரவையில் சேராமல் வெளியிலிருந்தபடி ஆதரவு தர முடிவு செய்தது. முதல்வர் கருணாநிதியும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். இருப்பினும் மன்மோகன் நிலையில் மாற்றம் இல்லை.
இதையடுத்து சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் திமுக அமைச்சரவையில் சேர்ந்தது. அப்படியும் டிஆர் பாலு, கனிமொழிக்கு இடம் தரப்படவி்ல்லை. எதிர்பார்த்த முக்கிய இலாகாக்கள் திமுகவுக்கு கிடைக்கவில்லை.
தற்போது பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை நீக்க காங்கிரஸே நினைத்தாலும் கூட உரிய காரணத்தைக் கூறியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காரணம், மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் அப்படி அமைந்துள்ளன.
No comments:
Post a Comment