திருத்துறைப்பூண்டி: ""தி.மு.க.,- அ.தி.மு.க., இருவரும் மேடைபோட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வதை காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கை பார்க்காமல், நமது கட்சி சாதனையை மேடை போட்டு மக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே காங்கிரஸை வலுவடையச் செய்ய முடியும்,'' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழா, சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் குகநாதன் தலைமையில் நடந்தது. நாகை லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு முன்னிலையில் வகித்தார். தொகுதி காங்கிரஸ் துணைத்தலைவர் கலைவாணி காமராஜ் வரவேற்றார்.
சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்து வைத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: என்னை காங்கிரஸ் கட்சியில் சர்ச்சைக்குரியவன் என்று விவாதம் நடத்துகின்றனர். அதற்கு காரணம், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சாதனையை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதனால், என்னை விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் ஒருவரை ஒருவர் மேடை போட்டு விமர்சனம் செய்து கொள்கின்றனர். இதை நாம் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட வேண்டும். காங்கிரஸ் கட்சி செய்த சாதனை, விவசாயிகள் கடன் ரத்து, கல்விக்கு வட்டியில்லா கடன், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் பல கோடி ரூபாய்களை விவசாயிகளுக்கு ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதெல்லாம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு. இது மக்களுக்கு தெரியாது. இதை நேரடியாக மக்களிடம் எடுத்துச் சொல்ல தொடர்ந்து மேடை போட்டு பேச வேண்டும். தமிழகத்தில் சமீபத்தில் இயக்கப்பட்ட 600 புதிய பஸ் மத்திய அரசின் திட்டத்தில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு தெரியாது. இதை எல்லாம் நாம் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதன் மூலம் தான் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதுடன், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவதற்கான அடித்தளமாக அமையும். எனவே, காங்கிரஸாரும், இளைஞர் காங்கிரஸாரும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உறுதியுடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய ஆலோசனைக்குழு உறுப்பினர் சிரஞ்சீவி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வரதராஜன், முன்னாள் பொதுச் செயலாளர் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரவீந்திரன், துரைராஜ், கோவிந்தராஜ் உட்பட சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸார் செய்திருந்தனர். பாஸ்கர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment