விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் மாற்று இடத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க 22 கிராமங்களில் இருந்து விவசாய நிலங்கள், வீடுகள் உட்பட 4,825 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து "இப்பகுதியில் உள்ள விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நேற்று பா.ம.க., மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: ஏழை மக்களின் விளை நிலங்களை கையகப்படுத்துவோம் என்றால் அங்கு ராமதாஸ் இருப்பார். விளை நிலங்களை பாழாக்கும் இடத்தில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.ஒரு சென்ட் நிலத்தைக்கூட ஏழை விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கக் கூடாது என தொடர்ந்து நான் கூறியபோது, ஒரு சென்ட் விளை நிலத்தைக் கூட எடுக்க மாட்டேன் என சட்ட சபையில் கருணாநிதி சொன்னார். என் அறிக்கையை பார்த்து கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க ராமதாஸ் முட்டுக்கட்டை போடுகிறார்; எங்கே கட்டுவது என முதல்வர் அறிக்கை விடுகிறார். கிரீன் பீல்டு விமான நிலையம் தேவைதான். ஆனால் 22 கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடமான செங்குன்றம் அடுத்த அலமாதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விமான நிலையம் பயனற்ற நிலையில் உள்ளது. அதனருகே வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், பால் பண்ணைக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நிலமும் உள்ளது.அங்கு ஏன் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கக் கூடாது.
நாங்கள் நில ஆர்ஜிதம் செய்யவில்லை, மண்ணழுத்த பரிசோதனைதான் செய்தோம் என முதல்வர் கூறுகிறார். விருப்பத்துக்கு மாறாக நிலங்களை அபகரிப்பதற்கு பெயர்தான் ஆர்ஜிதம்.ஆசிய வளர்ச்சி வங்கியின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 99.5 சதவீதம் ஏழைகள்தான் உள்ளனர். மீதமுள்ள அரை சதவீத பணக்காரர்கள்தான் விமானத்தில் செல்பவர்கள். இதற்காக ஏழை விவசாயிகளின் விளைநிலங்களை அபகரிக்காமல் மறுபரிசீலனை செய்து, மாற்று இடத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீதும், சம்பவ இடத்துக்கு வராத திருவள்ளூர் வருவாய் அதிகாரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment